துப்பாக்கி முனைகளை விடவும் பேனா முனைகளே வலிமையானவை! அமைச்சர் டக்ளஸ் (Photos)
போரியலின் பக்கம் கவனம் செலுத்திய ஊடகங்கள் போரினால் வதைபட்ட மக்களின் வாழ்வியலை பற்றியும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் எனவும் தன்னால் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தப்பட்டு வந்த 13ஆம் திருத்தச் சட்டத்தினை வலுப்படுத்தி வந்தால் பாரிய அழிவுகளைத் தடுத்திருக்க முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அரசாங்க வெளியீட்டு பணியகத்தின் ஏழாவது மாவட்ட அலுவலகமாக இவ் அலுவலகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இதற்கு முன்னர் கண்டி, காலி, அனுராதபுரம், வவுனியா, பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இப்பணியகம் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வெளியீடுகளை வார நாட்களில் இங்கு விலைக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சுரேன் ராகவன் ஆகியோரும் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், அரசாங்க தகவல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
அரசாங்க தகவல் வெளியீட்டுப் பணியகத்தின் கிளை காரியாலயத்தினை யாழ் மாவட்ட செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வினை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில்,
"கரை காண விரும்பும் கப்பலுக்கு ஒளி காட்டும் கலங்கரை விளக்காக ஊடகங்கள் திகழவேண்டும். நிமிர்ந்தெழ விரும்பும் மக்களுக்கு அறிவூட்டும் கல்வியாக ஊடகங்கள் இருக்க வேண்டும். அரசியல் தலைமைகளின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்வது போல், மக்களின் ஆழ்மன விருப்பங்களையும் கண்டறிந்து அரசியல் தலைமைகளிடம் சொல்ல வேண்டும்.
எங்கெல்லாம் மக்கள் சகல உரிமைகளும் பெற்று வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் ஊடகங்களும் மக்களை வழி நடத்திச் சென்றிருக்கின்றன. போரியலின் பக்கம் கவனம் செலுத்திய ஊடகங்கள் போரியலில் வதைபட்ட மக்களின் வாழ்வியலின் மீதும் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். துப்பாக்கி முனைகளை விடவும் பேனா முனைகளே வலிமையானவை.
ஆகவே ஊடகவியலாளர்களே வலிமைமிக்க போராளிகள், அழிவாயுதங்களை ஏந்திய காலங்கள் முடிந்து விட்டன. இன்று நீங்கள் அறிவாயுதங்களை ஏந்த வேண்டும். ஊடகமும் அறிவாயுதங்களில் ஒன்று. தமிழ் மக்களின் உரிமையை நோக்கிய பயணத்தில் 13வது திருத்தச்சட்டம் நல்லதொரு ஆரம்பம்.
இதை நாம் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்த போது எமக்கு பக்கபலமாகச் சகலரும் இருந்திருந்தால் இத்தனை அழிவுகள் இங்கு நடந்திருக்காது, காலம் கடந்தாவது இன்று எமது யதார்த்த வழிமுறைக்குப் பலரும் வந்திருப்பதை நான் வரவேற்கின்றேன்.
ஆனாலும், ஏன் எதிர்க்கின்றோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் சிலர் எதிர்ப்பதும், ஏன் ஆதரிக்கின்றோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் ஆதரிப்பதும் விமோசனங்களை ஒரு போதும் தரப்போவதில்லை.
இனி நாம் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்? இவைகள் குறித்த ஆழ்மன உணர்வுகளும் உறுதியும் சகலருக்கு இருக்க வேண்டும். அடுத்து வரும் சந்ததிக்கு நாம் எதை விட்டுச் செல்லப்போகின்றோம்? எதை உருவாக்கிக் கொடுக்கப் போகிறோம்?
இவைகள் குறித்த தொலை தூரப் பார்வையும் சமூக அக்கறையும் ஊடகங்களுக்கும் இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சமூக பொருளாதார மாற்றங்களையே நாம் விரும்புகின்றோம். அதை நோக்கியே உழைத்து வருகின்றோம்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






