மட்டக்களப்பில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரிதிணைக்கள அதிகாரி ஒருவர் கைது
மட்டக்களப்பில் (Batticaloa) காணி விவகாரம் ஒன்றில் 2 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் உள்நாட்டு
இறைவரி திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது, நேற்று (15) கல்லடி பகுதியில் வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரி, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் காணி ஒன்றை கொள்வனவு செய்தமைக்கான வரி தொடர்பாக 2 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு
இதனையடுத்து, காணி கொள்வனவு செய்தவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், அவர்களின் ஆலோசனைக்கமைய, கல்லடியிலுள்ள உள்நாட்டு இறைவரித்திணைக்களப் பகுதியில் மாறு வேடத்தில் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த காரியாலயத்துக்கு வெளியில் வைத்து அந்த அதிகாரி 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்டபோது அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அதிகாரி அனுராதபுரத்தை சேர்ந்தவர் எனவும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அவரை மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலையபடுத்திய பின்னர் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டு புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |