இனவாத செயற்பாட்டுக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ள கோட்டாபய அரசாங்கம்:பிமல் ரட்நாயக்க சாடல்
ஞானசார தேரரை செயலணிக்கு தலைவராக நியமித்ததன் மூலம் இலங்கையில் இனவாத செயற்பாட்டுக்கு கோட்டாபய அரசாங்கம், அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளது என ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
“தமிழ்வின்“ செய்திச்சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் படி “ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது பொதுவான விடயமாகும்.
எனவே அதற்காக ஒரு செயலணியை உருவாக்க வேண்டியது இல்லை என்பதே ஜேவிபியின் நிலைப்பாடாகும்.
இலங்கையின் பல்வேறு நீதிமுறைகள் உள்ளன. இந்த நிலையில் நாட்டில் நீதியை மீறிச்செயற்படும் பிரிவினரும் உள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத் தரப்பினர், அரசாங்கத்துக்கு சார்பான அதிகாரிகள் நீதிக்கு புறம்பாகவே செயற்பட்டு வருகின்றனர்.
ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பது என்றால், அந்த நாடாளுமன்றம் இறந்துவிட்டதாகவே கருத வேண்டும்.
இதனை தவிர, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) 20 ஆவது திருத்தத்தின் மூலம் மேலும் அதிகாரங்கள் கிடைத்துள்ளன.
மொத்தத்தில் அவரே இலங்கையின் நீதியாக செயற்படுகிறார். அரச தலைவர், படைகளின் தளபதி என்று அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்.
நீதிபதிகளை நியமிப்பது, சட்டமா அதிபரை நியமிப்பது உட்பட்ட அனைத்து விடங்களையும் அவரே மேற்கொள்கிறார்.
இந்தநிலையில் இரண்டு வருடங்கள் கழித்து இந்த நீதிக்காக ஒரு செயலணியை அவர் உருவாக்க முனைந்தமையே அவரின் இயலாமையை காட்டுகிறது.
இதேவேளை உருவாக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வரைபுக்கான செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், இனவாதியாகவும், மதவாதியாகவும் செயற்பட்டு வருகிறார்.
அத்துடன் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட அவர் அரசியல் ரீதியாக பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஒருவராவார்.
எனவே அவருக்கு இந்த செயலணிக்கு தலைமைத் தாங்க தகுதி இல்லை. அத்துடன் இந்த செயலணியில் தமிழர்கள் இடம்பெறவில்லை. பெண்கள் உள்ளடக்கப்படவில்லை.
இது நியமன சட்டத்துக்காக வழங்கப்பட்ட நியமனம் அல்ல. ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட அரசியல் நியமனமாகும்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விடயத்தில் கர்தினால் உட்பட்ட மதத்தலைவர்களின் விமர்சனங்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் முகங்கொடுத்து வருகிறது.
எனவே கோட்டாபயவின் தோல்வியை சீர்செய்து, கத்தோலிக்க மக்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே ஞானசார தேரர் உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது பொதுபல சேனா மற்றும் தௌஹித் ஜமாத் போன்ற அமைப்புக்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டமையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே (Mahinda Rajapaksa) ஏற்றுக்கொண்டிக்கிறார்.
எனவே முன்னர் அரசாங்கத்துடன் மறைந்து செயற்பட பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரருக்கு தற்போது அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் உள்நாட்டில் அரசாங்கம் கேலிக்கு உள்ளாகியிருக்கிறது.
வெளிநாடுகளை பொறுத்தவரை இலங்கைக்கு எதிரான நாடுகளுக்கு இது சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது என்றும் பிமல் ரட்நாயக்க தொிவித்துள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri