அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும, உறுமய, மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட வேலைத் திட்டங்களின் பலன்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய(Saman Ratnapriya) தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட உறுமய, அஸ்வெசும மற்றும் மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அரசியல் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினரைத் தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
நிவாரண வேலைத்திட்டங்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல முக்கிய வேலைத்திட்டங்களை அமுல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். அந்த வேலைத்திட்டங்கள் இன்று செயற்படுத்தப்படுகின்றன.
அதன்படி உறுமய, அஸ்வெசும , மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட மக்களுக்கு பெருமளவில் பலனளிக்கும் திட்டங்கள் குறித்து அனைவரையும் தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம். உறுமய வேலைத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும்.
20 இலட்சம் மக்கள் அதனால் பயனடைவர். வரலாற்றில் ஒருபோதும் இந்நாட்டில் இதுபோன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.
உறுமயவின் முதற்கட்டமாக 10,000 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனையோருக்கு விரைவில் காணி உறுதிகள் வழங்கப்படும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
உறுமய, அஸ்வெசும மற்றும் மலைநாட்டுத் தசாப்தம் ஆகிய இந்த மூன்று வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். அவ்வாறு இல்லாமல் இந்த வேலைத் திட்டங்களை வெற்றகரமாகச் செயற்படுத்த முடியாது.
மேலும், அது குறித்து மக்களை தெளிவுபடுத்தி ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய இந்தத் திட்டங்களை செயற்படுத்த அரசியல் செயற்பாட்டாளர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது.
மேலும் சமூர்த்தி திட்டத்தின் கீழ் 8000 ரூபாய் வரையில் பெற்றவர்கள் அஸ்வெசும திட்டத்தில் நிவாரணமாக 15000 ரூபாய் வரை பெறுகின்றனர்.
இந்த வேலைத்திட்டங்களின் ஊடாக பொருளாதார ரீதியில் மக்களை வலுவூட்டுவதே ஜனாதிபதியின் நோக்கமாக உள்ளது. அதனால் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமானதாக மாற்ற நாம் இடைத் தரகர்களாகச் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |