ஜப்பானிய ஒப்பந்ததாரருக்கு அதிக நிதியை செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் பரிசீலனை
ஜப்பானிய ஒப்பந்ததாரருக்கு அதிக நிதியை செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக, விமான நிலையம் மற்றும் ஏவியேஷன் சர்வீசஸ் லிமிடெட் நிதியின் மூலம் தடைப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தைத் தொடர அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீட்டை வழங்குவதில்லை என்று ஜப்பான் சர்வதேச கூட்டுத்தாபன நிறுவனம் முடிவெடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இந்த ஆண்டு ஜூலை முதல் திட்ட செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் இயலாமை
கடனை திருப்பிச் செலுத்த இலங்கை அரசாங்கத்தால் இயலாமையைக் காரணம் காட்டி திட்டத்தை ஜப்பானிய நிறுவனம் நிறுத்தியது.
இந்த இடைநிறுத்தத்தின் பின்னர் ஜப்பானிய நிறுவனத்துக்கு அர்ப்பணிப்புக் கட்டணமாக ஒவ்வொரு மாதமும் 1.5 பில்லியன் செலுத்த வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை ஜப்பானிய நிறுவனத்துக்கு 5 பில்லியன் ரூபாய்களை வழங்கவேண்டியுள்ளது.
துணைக் குழு நியமிப்பு
இந்த நிலையில் தற்காலிக நடவடிக்கையாக, சொந்தமான நிதியைப் பயன்படுத்தி திட்டத்தை தொடர அமைச்சரவை பத்திரத்தை அமைச்சு சமர்ப்பித்துள்ளது.
இந்த முன்மொழிவை ஆய்வு செய்வதற்காக அமைச்சரவை ஒரு துணைக் குழுவை நியமித்துள்ளதோடு அதன் பரிந்துரைகள் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த திட்டத்தின் அத்தியாவசிய பராமரிப்புகளை தொடர 700
மில்லியன் ரூபாய்களை நிதியமைச்சு ஒதுக்கியுள்ளது.
