அடுத்த ஜனாதிபதி சஜித் என்ற நிலைப்பாடு சமூகமயப்படுத்தப்படுவதை தடுக்கவே அரசாங்கம் மே தினக்கூட்டங்களை தடை செய்துள்ளது - எஸ்.எம். மரிக்கார்
சஜித் பிரேமதாசவே நாட்டின் அடுத்த ஜனாதிபதி என்ற நிலைப்பாடு சமூகமயப்படுத்தப்படுவதை கூடிய வரை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இம்முறை மே தினக் கூட்டங்களை நடத்துவதைத் தடை செய்யவில்லை எனவும் ,அடுத்த அரசாங்கத்தை ஐக்கிய மக்கள் சக்தியே அமைக்கும் என்ற நிலைப்பாடு சமூகமயப்படுத்தப்படுவதை தடுக்க மே தினக் கூட்டங்களைத் தடை செய்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் வைரசின் மூன்றாவது அலை தடுப்பதற்காக என்று அரசாங்கம் பொய்யான அச்சத்தை சமூகத்தில் விதைத்து வருகிறது.
இதனைக் காரணம் காட்டி மே தினக் கூட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், அதனை நடத்துமாறு அழுத்தம் கொடுக்க முடியாது எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.