காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது..! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை - அமைச்சர் சரோஜா போல்ராஜ் அறிவிப்பு
காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சறோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கண்டாவளை பிரதேசத்திற்கான மக்கள் அலுவலகம் திறப்பு விழா இன்று (30.08.2026) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், நாங்கள் உண்மையாகவே இந்த மக்களுக்கான எங்களுடைய அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்ந்து போராடும் உறவுகள்
நடந்திருக்கின்ற இந்த அசௌகரியங்கள் அனைத்துக்கும் மத்தியிலும் தங்களுடைய உயிர் உறவுகளைத் தேடி பெண்கள், தாய்மார் மற்றும் உறவினர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை வலுப்படுத்துவதற்கும், அவர்களுக்கான உண்மை நீதி என்ன, என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கும் எங்கள் அரசாங்கம் எப்போதுமே இங்கு மட்டுமல்லாமல் இலங்கை முழுவதும் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது.

சட்டத்துறை அமைச்சரின் விஜயம்
சட்டத்துறை அமைச்சரும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து அவர்களைக் கண்டு அவர்களுடன் ஆலோசித்திருந்தார்.
உண்மையாகவே எங்கள் அரசாங்கம் இவ்வாறான நிலைகளைக் கண்டறிந்து, நடந்திருக்கின்ற விடயங்களைப் பற்றி தேவையான பரிசோதனைகளையும் விசாரணைகளையும் நடத்திக் கொண்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.
