மக்கள் மத்தியில் பாரிய கசப்புணர்வினை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம்: ஞா.சிறிநேசன் (VIDEO)
ஜே.வி.பியினர் இறந்த தங்களுடைய போராளிகளை நினைவு கூருவதற்குச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.ஆனால் தமிழ் மக்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என்றால் இனவாத அடிப்படையில் இந்த விடயம் பார்க்கப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
20ஆம் திகதியன்று மரணித்தவர்களின் நினைவுகூரலைச் செய்ய வேண்டுமென ஆயர் பேரவை கோரிக்கை விடுத்திருக்கின்றது. கார்த்திகை மாதம் 27ஆம் திகதியைத் தியாக ரீதியில் போராட்டம் செய்த போராளிகளின் நினைவு தினமாக அனுஷ்டிப்பதுண்டு.
அந்த நாளையும்,இந்த நாளையும் அறிவித்ததன் காரணமாக ஏதும் குளறுபடிகள், குழப்பங்கள் ஏற்படலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக இது தொடர்பாக எமது கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் மற்றும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பற்றாளராக இருக்கின்ற அருட்தந்தை ஜோசப் மேரியிடம் பேசியிருந்தபோது அவர்கள் கூறிய விடயம் என்னவென்றால் உண்மையில் கத்தோலிக்கர்கள் மறைந்தவர்களை அனுஷ்டிக்கின்ற மாதமாக நவம்பர் மாதம் 2ஆம் திகதி இருக்கின்றது.
இம்முறை அதனை 20ஆம் திகதியாக பிற்போட்டிருக்கின்றார்கள். ஜே.வி.பியினர் இறந்த தங்களுடைய போராளிகளை நினைவுகூருகின்ற செயற்பாட்டைத் தென்னிலங்கையில் மாத்திரமல்லாமல் வட இலங்கையிலும் செய்திருக்கின்றார்கள்.
சிங்களவர்களாக இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் அதனைச் செய்வதற்கு அனுமதி கொடுத்திருக்கின்ற அதேவேளை தமிழர்களாக இருக்கின்ற காரணத்தினால் விடுதலைப் போராட்டத்தில் தியாகிகளாக மறைந்தவர்களின் நினைவுகூரலை அனுஷ்டிக்கவிடாது தடுப்பதென்பது உண்மையில் இனவாத ரீதியாகத் தடுக்கின்ற செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது.
ஆயர்களும் இந்த விடயம் தொடர்பில் தங்களது கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் வழக்கமாக நவம்பர் மாதத்தில் செய்கின்ற நிகழ்வைச் செய்வதாகக் கூறியிருக்கின்றார்கள்.
அதேபோன்று வழக்கமாக கார்த்திகை மாதத்தில் செய்யப்படுகின்ற மாவீரர் தினத்தினை செய்வதில் எந்தவித தடங்கலும் இல்லை என்பதையும் கூறியிருக்கின்றார்கள்.
கோவிட் - 19 காரணமாக மக்களின் வருமானம் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. பயணத்தடை என்றும் அவசரக்கால நிலைமையென்றும் நாட்டில் முடக்கநிலை காணப்பட்டமையினால் மக்களுக்கு உழைக்கமுடியாத சூழ்நிலை காணப்பட்டது. இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக தங்களுக்கு ஒரு நிவாரணம் கிடைக்கும் மானியம் கிடைக்கும் என்றெல்லாம் மக்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் மக்கள் எதிர்பார்த்த வரவு செலவுத் திட்டமாக இது அமையவில்லை. பாதுகாப்பு செலவுக்காக 137பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இன்று யுத்தம் ஓய்ந்து விட்டது. ஒரு சுமுகமாகச் சூழ்நிலை காணப்படுகின்றது. எந்த நாட்டோடும் எமது படைகள் யுத்தம் செய்யவேண்டிய அவசியமில்லை.
எல்லைப்போர் இல்லை. தீவாகக் காணப்படுகின்றது. இந்த நிலையில் பாதுகாப்புச் செலவானது மொத்தத் தேசிய உற்பத்தியில் 15வீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை கல்வி,சுகாதாரம் மற்றும் மக்களின் சமூகநலன் சார்ந்த சேவைகளுக்குப் போதியளவு நிதி வழங்கப்படவில்லை.
இது கொடுக்கின்ற வரவு செலவுத் திட்டமல்ல, எடுக்கின்ற வரவு செலவுத் திட்டம் என நிதி அமைச்சர் கூறியிருக்கின்றார். அரசு பலவிதமான வரிகளை அறவிட்டுக்கொண்டிருக்கின்றபோதும் அறவிட்ட வரிகளுக்குப் பதிலாக மானியங்களை, நிவாரணங்களைக் கொடுக்காமல் மக்களிடமிருந்து எடுக்கின்ற வரவு செலவுத் திட்டம் என்ற அடிப்படையில் அவர் கூறியிருக்கின்றார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி மிக மோசமாக உயர்ந்து கொண்டிருக்கின்ற வேளையில் நிவாரணம் கிடைக்காதா, பரிகாரம் கிடைக்காதா, அரசு எமக்கு உதவி செய்யாதா என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில் மக்களை முழுமையாக ஏமாற்றிய, விலை உயர்விற்கு ஒரு தீர்வு சொல்லாத, மக்களுக்கு நிவாரணம் வழங்காத ஒரு வரவு செலவுத் திட்டமாக இது அமைந்திருக்கின்றது.
அத்துடன் நிதி அமைச்சர் அவர்கள் அரச ஊழியர்கள் அரசிற்கு ஒரு சுமையாக இருப்பதாகப் பொருத்தமற்ற ஒரு கருத்தினை கூறியிருக்கின்றார். உண்மையில் அரசசேவை நடப்பதற்குக் காரணமாக இருப்பவர்கள் அரச ஊழியர்கள், அரச உத்தியோகத்தர்கள். அப்படிப்பட்ட அரச ஊழியர்கள் சுமையாக இருக்கின்றார்கள் என்றால் அரச நிர்வாகத்தை எவ்வாறு கொண்டு நடத்துவது என்ற கேள்வி எழுகின்றது.
அரச ஊழியர்கள் அரச சேவைக்கு உரியவர்களாக இருந்துகொண்டு அரசின் கட்டளைகளை அமுல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்களைப் பரிகாசமான முறையில் அரச ஊழியர்கள் அரசிற்கு ஒரு சுமையாக இருக்கின்றார்கள் என்ற கருத்தினை வெளியிட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அரச ஊழியர்கள் சுமையாக இருக்கின்றார்கள் என்றால் அளவுக்கதிகமாக பாதுகாப்புப் படைகளை நியமனம் செய்துள்ளபடியால் அவர்களுக்கு அதிக செலவினங்களைச் செய்ய வேண்டியிருக்கின்றது.
அந்த பாதுகாப்பு செலவீனம் விரலுக்கு மிஞ்சிய வீக்கமாக இருக்கின்றபடியால் அது உண்மையில் அரசுக்குச் சுமையாக இருக்கின்றது. 126கோடி மக்கள் உள்ள இந்தியாவிற்கு 13இலட்சம் படைவீரர்களே இருக்கின்றார்கள்.
அவர்கள் சீனா, பாகிஸ்தானிற்கு எதிராக எல்லைப்போரும் செய்கின்றார்கள். ஆனால் 2கோடி 20 இலட்சம் வாழ்கின்ற எமது நாட்டில் ஒரு இலட்சத்தையும் கடந்து 2 இலட்சம் வரை படைகள் இருப்பதென்பது இதுவே அரசிற்கு உள்ள பெரிய சுமை. இதனால்தான் அரசிற்கு அதிக செலவு ஏற்படுகின்றது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்த பாதுகாப்புச் செலவினங்களைக் குறைப்பதன் மூலமாக மக்களுக்குரிய, விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தைக் கொடுப்பதற்கும் அடிமட்ட மக்களை வாழ்விப்பதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும். இந்த அரசாங்கமானது சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம்,தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் என்ற அடிப்படையில் செயற்படுகின்றது.
ஜே.வி.பியினர் இறந்த தங்களுடைய போராளிகளை நினைவு கூருவதற்குச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கின்றது, ஆனால் தமிழ் மக்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என்றால் இனவாத அடிப்படையில் இந்த விடயம் பார்க்கப்படுகின்றது. மக்கள் தங்களுடைய இல்லங்களில் இதனை அனுஷ்டிப்பதை அரசு தடுக்க முடியாது.
கடந்த நல்லாட்சிக் காலத்தில் நாங்கள் பகிரங்கமாக மாவீரர் தினத்தையும் அன்னை பூபதியின் நினைவு தினத்தையும் தியாகி திலீபனின் நினைவு தினத்தையும் அனுஷ்டித்தோம்.
இப்போது அவர்கள் அதனைத் தடுத்து மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றபடியால் மக்கள் தங்கள் வாழிடங்களில் இந்நிகழ்வை அனுஷ்டிப்பதற்குரிய ஒழுங்கை செய்வார்கள்.
அதனை நிரந்தரமாக அவர்களால் தடுக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு அவர்களால் தொல்லை கொடுக்க முடியும். மீண்டும் அதனை அனுஷ்டிப்பதற்குரிய காலம் கனிந்துவரும்.
விவசாயிகளைப் பொறுத்தவரை அதிகளவில் வயல் செய்பவர்களும் இருக்கின்றார்கள், சாதாரணமாக 5ஏக்கர்,6ஏக்கர்களில் வயல் செய்பவர்களும் இருக்கின்றார்கள்.
நாங்கள் பணம் படைத்த விவசாயிகள் என்று சொல்லாமல் விவசாயத்தில் ஈடுபடுகின்ற அனைவருக்குமாகவே நாங்கள் குரல் கொடுத்திருக்கின்றோம். அரசின் தரப்பாகச் செயற்படுகின்றவர்கள் அரசிற்குச் சார்பாக தங்கள் கருத்துக்களைக் கூறவேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
அரச தரப்பிலிருக்கின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறிய கதை வேடிக்கையாக இருக்கின்றது.ஒவ்வொரு விவசாயியும் மில்லினராக மாறமுடியும் என்ற பொருத்தமற்ற கருத்தினை முன்வைத்திருக்கின்றார்.அரசி விலையும் அதிகரித்துள்ள நிலையில் அரிசியை விடுத்து எதனை உண்ணுவது என்ற கேள்வியும் எழுகின்றது.
விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் கஷ்டங்களை நாங்கள் விளங்கியிருக்கின்றோம்.கடந்த காலத்தில் வடக்கு கிழக்கு என பிரதேச வாதம் செய்தவர்கள் இன்று விவசாயிகளையும் இரண்டாகப் பிரிக்கப்பார்க்கின்றார்கள்.விவசாயம் பாதிக்கப்படும்போது அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்.
இந்த அரசாங்கம் மக்கள் மத்தியில் பாரிய கசப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளது.அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.இந்த அரசாங்கத்தினை சிங்கள மக்களே வெறுக்கும் நிலையில் இங்குள்ள சிலர் தொங்கிக்கொண்டிருப்பதற்கு இந்த அரசாங்கம் தேவைப்படுகின்றது.
அரசாங்கம் மாற்றப்படுமானால் இவர்களின் தலைவிதியும்
மாற்றப்படும் என்று அச்சம்கொண்டு சிங்கள மக்களைவிட அரசாங்கத்தில்
ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ் பிரதிநிதிகள்தான் அரசாங்கத்தினை
தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகப் பொருத்தமற்ற கருத்துகளை மக்கள்
மத்தியில் விதைத்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.