அதிகாலை வங்கியை உடைத்து பெருந்தொகை தங்க நகைகள் கொள்ளை! விசாரணையில் வெளியான தகவல்
மொரகஹஹேன, கோரலைம பிரதேசத்திலுள்ள கிராமிய வங்கி ஒன்றின் நகை பெட்டகத்தை உடைத்து, பெருமளவிலான தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்ற கும்பலை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணையை தொடங்கியுள்ளன.
இந்த திருட்டு சம்பவம் நான்கு பேர் கொண்ட கும்பலால் நேற்று (23) அதிகாலை சுமார் 1.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து கொள்ளை
நிஞ்ஜாக்கள் போல் வேடமிட்டு வந்த கொள்ளையர்கள் வங்கியில் சுமார் நான்கு மணி நேரம் தங்கியிருந்து, உலோக வெட்டியால் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து தங்க நகைகளை திருடியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

வங்கி வளாகத்திற்குள் இரகசியமாக நுழைந்த கொள்ளைக்கும்பல், அங்கு இருந்த பாதுகாப்பு ஊழியர்களை கட்டிப்போட்டு விட்டு, வங்கியின் பின்புறம் உள்ள குளியலறை ஜன்னல் வழியாக வங்கிக்குள் நுழைந்துள்ளது.
இதன்பின்னர் கும்பலானது அங்குள்ள பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைத் திருடிக் கொண்டு தப்பிச்சென்றுள்ளது. வங்கியால் அடமானமாகப் பெறப்பட்ட 107 பவுண் தங்கம் இந்த பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
கொள்ளையர்கள் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து தங்க நகைகளை திருடிய பிறகு, வங்கியில் நிறுவப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிவிஆர் அமைப்புகளையும் எடுத்துச்சென்றதாக பொலிஸ் கூறுகின்றது.
மேலும், நேற்று முழுவதும் அப்பகுதியில் நிலவிய மின்வெட்டு காரணமாக, அருகிலுள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களின் பாதுகாப்பு கேமராக்களை பொலிஸாரால் சரிபார்க்க முடியவில்லை என்றும், நேற்று மாலை வரை கொள்ளையர்கள் குறித்த எந்தத் தடயத்தையும் பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
கைரேகை அதிகாரிகள் விசாரணை
இவர்கள் உலோக வெட்டிகளைப் பயன்படுத்தி, பாதுகாப்புப் பெட்டகத்தில் சுமார் ஆறு அங்குல விட்டத்தில் ஒரு வட்டத்தை வெட்டி உள்ளூர் மக்களால் அடகு வைக்கப்பட்டிருந்த 107 பவுண் தங்கம் அடங்கிய 127 சிறிய பைகளை வானொன்றில் தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் வங்கியை சேர்ந்த யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அனுபவம் வாய்ந்த கொள்ளையர்கள் குழுவால் இந்த கொள்ளை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய கைரேகை அதிகாரிகள், அங்குள்ள கருவிகளில் இரண்டு கைரேகைகளை கண்டறிந்துள்ளனர்.
கொள்ளையர்கள் ஒரு வான் அல்லது வேறு ஏதேனும் வாகனத்தில் வந்திருக்கலாம் என வலுவாக சந்தேகிக்கப்படுகின்றது.
இதற்கமைய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan