சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல கோட்டாபய அரசாங்கம் நிர்ப்பந்தம்! அயலவரே காரணம்!
இலங்கை இன்று எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு கைகொடுக்கும் அயலவராக இந்தியா உருவாகி வருகிறது.
எனவே தமது பொருளாதார மீட்பு திட்டங்களுக்கு இந்தியாவை தவிர்க்கமுடியாத கட்டத்துக்கு இலங்கை வந்துள்ளது.
அந்த வகையில் இலங்கையின் உணவு,எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதில் இருந்த சிரமங்கள் தற்போது நீங்கியிருப்பதாகவே கருதலாம்.
அண்மையில் இந்தியாவுடன் செய்துக்கொள்ளப்பட்ட சம்பூர் சூரியஒளி மின்சார மைய உடன்படிக்கை மற்றும் மன்னார் காற்றாலை மின்சார திட்ட உடன்படிக்கை என்பன இந்த ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைக்காக இருந்த தடைகளை அகற்றியிருப்பதாக கருதப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் இப்போது உடனடி உதவிக்காக இந்தியாவை நம்பியிருக்கிறது.
இதன் ஒரு கட்டமாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பொருளாதார மீட்சிக்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இந்தியத் தலைவர்களுக்கு விளக்குவதற்காக புதுடெல்லிக்குச் செல்கிறார்.
இந்தியாவில் இருந்து எரிபொருள் மற்றும் மருந்து இறக்குமதிக்காக இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு இது ஒரு முன்னோடியான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இந்தநிலையில் பசில் ராஜபக்ச இந்தியா செல்வதற்கு முன்னர், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
இந்தியா வழங்கவுள்ள ஒரு பில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்த இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டியது அவசியமாகி உள்ளது.
இதன் மூலம் தாம் பெற்றுக்கொள்ளவுள்ள ஒரு பில்லியன் டொலர் கடனை திருப்பிச்செலுத்தும் முறை குறித்து இலங்கை, இந்தியாவுக்கு தெளிவுப்படுத்தவேண்டியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.