அமைச்சர்களை கடுமையாக திட்டிய கோட்டபாய - விருந்து வைத்து சமாதானம் செய்த மஹிந்த
சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களின் செயற்பாடு தொடர்பில் அதிருப்தி அடைந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவர்களை கடுமையாக திட்டியதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நாட்டை 3 வாரங்களுக்கு மூடுமாறு கோரி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளினால் கடந்த வாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் கோபமடைந்த ஜனாதிபதி, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பிலவுக்கு தொலைபேசி மூலம் கடுமையாக திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் எதுவும் பேசாமல் அடுத்த நாள் இவ்வாறான கடிதம் அனுப்பப்பட்டமையே ஜனாதிபதியின் கோபத்திற்கு காரணமாகியுள்ளது.
இந்த அமைச்சர்கள் மூவரும் அமைச்சரவையின் கூட்டு பொறுப்புகளை மீறியுள்ளதாக இங்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த மூவரையும் பதவி நீக்கும் அளவிற்கு ஜனாதிபதி கோபமாக இருந்தார் என ஆளும் கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதென சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த சம்பவத்தின் பின்னர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு தனது வீட்டில் மூன்று அமைச்சர்களுக்கும் இரவு உணவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது அமைச்சர்களுக்கு இடையில் ஏற்பட்டிருந்த சிக்கல்களை தீர்ப்பதற்கு பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டதாக குறித்த ஊடகங்கள் மேலும் தகவல் வெளியிட்டுள்ளன.