கோட்டாபயவிற்கு அனுமதி கொடுத்தமை தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு மனிதாபிமான அடிப்படையிலேயே தமது நாட்டில் தங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாகவும், 90 நாள் அனுமதியுடன் பேங்காக் வரவுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா மற்றும் வெளிவிவகார அமைச்சர் டொன் பிரமுத்வினாய் ஆகியோர் மனிதாபிமான காரணங்களுக்காக கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதை உறுதிப்படுத்தியதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலைதீவு சென்ற கோட்டாபய ராஜபக்ச
பாரிய ஆர்ப்பாட்டக்காரர்களின் அழுத்தத்தின் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி ஆசிய பிராந்தியத்தில் மூன்றாவது நாடான தாய்லாந்துக்கு ராஜபக்ச செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அதிருப்திக்குள்ளாக்கியதைத் தொடர்ந்து, ஜூலை 9ம் திகதி கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை விட்டு கோட்டாபய ராஜபக்ச வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தனர். மாலைதீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மொஹமட் நஷீத்தின் ஏற்பாட்டில், இலங்கை கடற்படைக் கப்பலில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ச, ஜூலை 14 அன்று மாலைதீவுக்குச் சென்றார்.
மாலைதீவில் இருந்து சிறப்பு விமானத்தில் சிங்கப்பூர் சென்ற அவருக்கு விசா காலம் முடிவடைந்ததை தொடர்ந்து மேலும் 14 நாட்கள் அங்கு தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.