கோட்டாபய பதவி விலகியதன் காரணம்! ரணில் பதவியேற்றதன் பின்னணி: வெளிவரும் புதிய தகவல்கள்
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வசதியாகத்தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கோட்டாபய பதவி விலக காரணம்
நாடாளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்க சில காரணங்கள் இருந்தன. நாம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சர்வகட்சி அரசாங்கமே நாட்டுக்கு சிறந்த தீர்வாக அமையும் என நினைத்தோம்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எங்கள் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பதவியில் இருந்து விலகினார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வசதியாகவே தான் பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு ஆசனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பார் என எண்ணினோம். மறுபுறம், அவருக்கு ஒரு தலைவராக பணியாற்ற நிறைய அனுபவம் இருந்தது.
ரணில் மீதான நம்பிக்கை
இந்த இரண்டு அம்சங்களையும் கருத்தில் கொண்ட பிறகு, சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கக் கூடிய சிறந்த நபர் அவரென்று நாங்கள் நினைத்தோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து யாரேனும் இருந்தால், அவர் அமைச்சரவையில் தனக்கெனத் தனிநபர்களை வைக்க முயற்சிப்பார்.
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஒருவரானால், அவர் தனது பெரும்பான்மையான உறுப்பினர்களை அமைச்சரவையில் வைத்திருக்க விரும்புகிறார்.
ஆனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. அவர் அதிகபட்சமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அமைச்சரவைக்கு ஒருவர் மட்டுமே. எனவே இந்தப் பணியைச் சரியாக நிறைவேற்றக் கூடியவர் அவர் என குறிப்பிட்டுள்ளார்.