மீண்டும் கோட்டாபய! நவம்பர் மாதம் வெளியாகும் உத்தியோகபூர்வ அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது குறித்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கட்சி மாநாட்டின் போது முக்கிய பல தீர்மானங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏன் ஆதரவு
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக மாத்திரமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகிறோம். எக்காரணிகளுக்காகவும் கட்சியின் கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டோம்.
பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் ஒன்றிணைந்த அரசியல் கட்சிகள் கொள்கை அடிப்படையில் செயற்படவில்லை.
மாறாக தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்பட்டதால் அரசாங்கத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியவில்லை.
ஆளும் தரப்பில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர்களின் அரசியல் பின்புலத்தை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
மேலவை இலங்கை கூட்டணி, மக்கள் சுதந்திர காங்கிரஸ் ஆகிய புதிய தோற்றங்கள் பொதுஜன பெரமுனவுக்கு ஒரு சவாலல்ல, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.
கோட்டாபயவின் அழைப்பை நிராகரித்த தரப்பினர்
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய எதிர்க்கட்சிக்கு பலமுறை அழைப்பு விடுத்தும், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சவால்களை பொறுப்பேற்க எதிர்தரப்பினர் தயாராக இருக்கவில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க போவதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தை முன்னிலைப்படுத்தியே தேர்தலில் போட்டியிடும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய மீண்டும் அரசியலில் ஈடுபடுவது குறித்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வமாக தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கட்சி மாநாட்டின் போது முக்கிய பல தீர்மானங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.