கோட்டாபயவினால் தென்னிலங்கை அரசியலில் குழப்பம் - பாதுகாப்பில் சிக்கல்
பதவியை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் பாதுகாப்புப் பிரிவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை இன்னும் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு தனியான பொலிஸ் பாதுகாப்பு பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள்
அவர்களின் ஒவ்வொரு பொலிஸ் பிரிவுக்கும் ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அவசியமாகும்.
ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு இதுவரை அமைச்சரவை அங்கீகாரம் பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
பொலிஸ், இராணுவ பாதுகாப்பு
அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதா அல்லது இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுவதா என்பது தொடர்பில் இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவொன்றை நிறுவ முடியும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.