பலத்த பாதுகாப்புடன் இலங்கை வர காத்திருக்கும் கோட்டாபய
இலங்கையில் இருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டுக்கு மீண்டும் வருவது தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது.
பதவிக் காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி பதவியில் விலகிய கோட்டாபயவை மீண்டும் அரசியலில் ஈடுபட வைக்க ராஜபக்சர்கள் தீவிரமான ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச நாட்டுக்கு மீண்டும் வருவதற்கு சகல உரிமைகளும் உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு வர தீர்மானம்
நாட்டுக்கு கோட்டபாய திரும்பி வரும் போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது சமகால அரசாங்கத்தின் பொறுப்பு என வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இலங்கை குடிமகன், அதுமட்டுமல்ல நாட்டை வழிநடத்திய ஜனாதிபதி. அவருக்கு நாட்டுக்கு வர உரிமையுண்டு, முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவருக்கு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். மேலும் அவர் அரசியலில் தொடர விரும்பினால் அதனை வரவேற்பதாகவும் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவே, அதில் எவ்வித மாற்றமும் கிடையாது. சூழ்ச்சிக்காரர்களே, தலைமைப்பதவியில் மாற்றம் கோருகின்றனர் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது காரியவசம் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
பொதுஜன பெரமுன தீவிர நடவடிக்கை
இதேவேளை தற்போதைய நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பினால், வன்முறைகள் வெடிக்கும் அபாயம் உள்ளதாக சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பூரண ஆதரவுடன் ரணில் ஜனாதிபதியாக தெரிவாகி உள்ளார். இந்நிலையில் பொதுஜன பெரமுன முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாய நிலைக்கு ரணில் தள்ளப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.