மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டவருக்கு எந்த நாடும் அடைக்கலம் வழங்காது: ஜீவரெத்தினம் தவேஸ்வரன்
21ஆம் நூற்றாண்டில் மனித குலத்தின் ஓர் இனத்தை கருவறுத்த செயற்பாட்டினை முன்னெடுத்த ஒரு ஜனாதிபதிக்கு மனித உரிமையினை நேசிக்கும் எந்த நாடும் அடைக்கலம் வழங்காது என தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் பணிப்பாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜீவரெத்தினம் தவேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினராகிய தாம் பெரும் நெருக்கடியான காலகட்டத்திலேயே இந்த ஊடக சந்திப்பை நடத்துகின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியால் பெரும்
அசௌகரியங்களையும், சொல்ல முடியாத துன்பங்களையும் எமது மக்கள் அனுபவித்து
வருகின்றார்கள் என்பதை நினைத்து தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினர் மக்கள்
இயக்கம் என்ற அடிப்படையில் வேதனையும், விரக்தியும் அடைந்திருக்கின்றோம்.
எமது மக்களை இந்த அவல நிலையில் இருந்து காப்பாற்றுவதற்காகவும், பெரும் இழப்புகளை தவிர்த்துக் கொள்வதற்காகவும் பல வழிகளிலும் முயற்சி செய்து வருகின்றோம் என்பதை எமது மக்களுக்கு தெரியப்படுத்தி நிற்கின்றோம்.
மக்கள் எழுச்சி
இந்த பெரும் பொருளாதார நெருக்கடியால் முழு இலங்கை நாடும் பாதிப்புக்குள்ளாகி மீண்டு வருவதற்கு வழியின்றி தவிர்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த அவல நிலைக்கு காரணமாக இருந்தவர்கள் ராஜபக்ச குடும்ப ஊழல்வாதிகள் என்பதை முழு நாட்டு மக்களும் அறிந்து அவர்களுக்கெதிரான மக்கள் எழுச்சி இளையோர் போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை எமது மக்கள் அறிவீர்கள்.
ஆனால் இந்த நாட்டை கொள்ளையடித்த ஊழல்வாதிகளுக்கு ஆதரவளித்துக் கொண்டு எமது மக்களை துண்டாடி, இளையோர்களை கூறுபோட்டு, எமது சமூகத்தை மலினப்படுத்தி ராஜபச குடும்ப ஊழல் வாதிகளுக்கு பின்னால் அடகு வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் வடக்கு, கிழக்கில் பலர் உள்ளனர்.
எனவே இவர்களை கேள்விக்கு உட்படுத்தி நிற்பதோடு எமது மக்களையும், இளைய தலைமுறையினரையும் ஊழல்வாதிகளுக்கு பின்னால் திசைதிருப்பி எமது சமூக தன்மானத்தை இழிவுபடுத்தி கேள்விக்குள்ளாக்கியதை மக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
கண்டன அமைதிவழி ஆர்ப்பாட்டம்
அது மாத்திரம் அன்றி இவ்வாறானவர்களை கண்டணத்திற்குள்ளாக்கும் வகையில் எதிர்வரும் 17ஆம் திகதி காலை மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் மாபெரும் கண்டன அமைதிவழி ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் ஒழுங்கு செய்து உள்ளது.
எனவே வடக்கு, கிழக்கில் பிரதிநிதிப்படுத்துகின்ற எமது மக்கள், இளையோர்கள், பொது
அமைப்புக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் சமூக
செயற்பாட்டாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவளிப்பதோடு எமது எதிர்கால
தலைமுறையினருக்கான சமூகத்தை வலுப்படுத்தி நிற்குமாறு தமிழ் இளையோர் மக்கள்
இயக்கம் உரிமையோடு அழைப்பு விடுக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.