ஞானசார தேரரின் உருக்கமான கோரிக்கை
தனக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் மகா சங்கத்தினர் கோரிக்கை விடுக்க வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை நடைமுறைப்படுத்தும்போது அதிகாரிகளினால் இழைக்கப்பட்ட நிர்வாகத் தவறுகளை நிவர்த்தி செய்து, தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடமிருந்து மீண்டும் தனக்கு ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்றுத் தருமாறு அவர் கோரியுள்ளார்.
கொழும்பு தும்முல்லையில் உள்ள சம்புத்தத்வ ஜயந்தி மண்டபத்தில் நடைபெற்ற தமது '9.5 விகாரை' நூலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புத்த பெருமானின் போதனை
தனக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி மன்னிப்பை செல்லுபடியற்றதாக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள பின்னணியிலேயே இந்நிகழ்வு நடைபெற்றது.
புத்த பெருமானின் போதனைகளுக்கும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் அமைய தாம் சட்டத்திற்கு தலைவணங்குவதாக தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த ஜனாதிபதி மன்னிப்பை வழங்கும் நடைமுறையில் தவறு நடந்திருப்பின் அதற்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதற்காகத் தன்மீது பழிவாங்குவது அநீதியானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிச்சடங்கு செய்யும் நிலை
முன்னாள் ஜனாதிபதியோ அல்லது அதிகாரிகளோ தவறு செய்திருந்தால், தற்போதைய ஜனாதிபதியால் அதனைச் சரி செய்ய முடியும்.
எனவே, சரியான நடைமுறையின் கீழ் தமக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்குமாறு அனுரகுமாரவிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என நமது அனுநாயக்க தேரரிடம் கைகூப்பி வேண்டிக்கொள்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தாம் மீண்டும் சிறைக்குச் செல்வதற்குக் அஞ்சவில்லை எனவும், ஆனால் இவ்வாறான நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் நாட்டிற்காகவும் சங்கத்தினருக்காகவும் குரல்கொடுக்கும் இளம் பிக்குகள் கடுமையாக மனச்சோர்வடைவார்கள் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக, தனது 87 வயது தாயாரின் முன்னிலையில் தனக்காக உயிருடன் இருக்கும்போதே செய்யப்படும் இறுதிச் சடங்கு செய்யும் நிலைக்குக்கூட தாம் தள்ளப்பட்டுள்ளதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையும் தாழமுக்கம்! வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்