கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் ஹரிஸ் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்
பிரித்தாளும் தந்திரத்தினை பயன்படுத்தி தமிழ், முஸ்லிம்களிடையே மோதலை ஏற்படுத்துவதற்கு கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தை கையாளமுனைவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்கள் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரிக்கைவிட்டுக் கொண்டிருக்கும்போது தரம் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையானது கண்டிக்கப்பட வேண்டும்.
பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர் தமிழ் பேசும் மக்களை நோக்கி பல்வேறுவிதமான தாக்குதல்கள், சீண்டும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 90ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் அந்த விடயம் முன்னாள் அமைச்சர் கே.டபிள்யு தேவநாயகம் அவர்களினால் கையாளப்பட்டிருந்தது.
93ஆம் ஆண்டுகாலப்பகுதியில் 28பிரதேச செயலகம் அமைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளிவந்திருந்தது.
உபபிரதேச செயலகமாக அமைக்கப்பட்ட போதும் அதனை முழுமையான பிரதேச செயலகமாக அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு அது தொடர்பான பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் கடந்த ஆட்சிக்காலத்தில் இழுத்தடிப்புகளுடன் நடைபெற்றிருந்த காலத்தில் இடையில் ஆட்சி கலைந்தது.
தற்போது மகிந்த ராஜபக்ஸ அவர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேசியதன் பின்னர் அந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு இருந்த அதிகாரத்தினையும் குறைத்து அதன் தரத்தினை குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் சாதாரணமாக நிர்வாக அலுகுக்குரிய அதிகாரத்தினை முழுமையாக வழங்காமல் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் தமிழ் அரசியல்வாதிகளையும் அல்லது இரு சமூகத்தினையும் மோதவிடுவதற்கான பிரித்தாளும் தந்திரத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் இந்த இடத்தில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது. சாதாரணமாக செய்யவேண்டிய அவசியமான விடயமாக இந்த பிரதேச செயலக விடயம் உள்ளபோதிலும் சாதாரண அந்த விடயத்திற்காக பேரம்பேசி 20வது திருத்ததிற்கு ஏழு பேர் ஆதரவு வழங்கியிருந்தனர்.
அதேபோன்று இன்று குறித்த பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தவேண்டும் என்று தமிழ் தரப்பு வலியுறுத்திவரும் நிலையில் அதனை தரம் குறைக்கும் வேலையை முன்னெடுத்துள்ளனர்.
இது கண்டிக்கத்தக்க விடயமாகும். பிரித்தாளும் தந்திரமாக தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதவிடுவதற்காக இந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை கையாளும் நிலையுள்ளது.
இந்த பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கு இரண்டு தரப்பினரும் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
