அடுத்தடுத்து உக்ரைனுக்கு கிடைக்கும் ஆதரவு!நெருக்கடியில் ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் ஓர் ஆண்டை கடந்துள்ள நிலையில், ரஷ்யாவின் படையெடுப்பிற்கு உக்ரைனை மீண்டும் வலுவாக்க புதிய ஆயுத உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கமைய உக்ரைனுக்கு 2 பில்லியன் டொலர் ஆயுத உதவி வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இதேவேளை ரஷ்யாவுக்கான ஏற்றுமதிகளை மேலும் கட்டுப்படுத்தும் மற்றும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சில ரஷ்ய தயாரிப்புகள் மீதான வரிகளை பைடன் நிர்வாகம் உயர்த்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய கூட்டணியின் ஆதரவு
இது தொடர்பாக ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில், 'இப்போது உக்ரைனுக்கு ஆதரவாக நிற்பது மட்டுமல்ல, முன்னெப்போதையும் விட உலகளாவிய கூட்டணியின் ஆதரவு வலுவாக உள்ளது. ஜி7 அதன் நங்கூரமாக உள்ளது' என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனான மெய்நிகர் சந்திப்பிற்குப் பிறகு ஜி-7 தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், 'உக்ரைனுடன் நிற்பதிலும், தேவைப்படும் நாடுகள் மற்றும் மக்களுக்கு ஆதரவளிப்பதிலும், சட்டத்தின் அடிப்படையில் சர்வதேச ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் எங்கள் ஒற்றுமை ஒருபோதும் அசையாது' என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், கடினமான காலங்கள் வரக்கூடும். ஆனால் உக்ரைனில் என்ன ஆபத்து உள்ளது என்பதைப் பற்றி தெளிவாக கவனிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.