மன்னார் காற்றாலை விவகாரம் : வெளியான கண்டனம்
இன அழிப்பினை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நிகழ்கால உதாரணமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் நேற்று (30.09.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர்
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று அதிகாரத்தை காலடியில் மிதித்து மக்களை அவமதித்துள்ளதோடு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி போராட்டம் நடத்திய மக்கள் மீது பொலிசார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
மக்களுக்கான ஆட்சி தொடர்பில் சர்வதேச மன்றிலிருந்து உலகத்துக்கே பாடம் எடுக்கும் இலங்கை ஜனாதிபதி தனது சொந்த நாட்டில் தமது தேர்தல் பிரசார மேடைகளில் "மக்களின் விருப்பின்றி எந்த அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொள்ள மாட்டேன்" என்று கூறியதை நிறைவேற்றாது அராஜகம் புரிவதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில் இது இன அழிப்பின் இன்னுமொரு வடிவமாகும்.
அன்று யுத்தகாலத்தில் தமிழர் தேசத்தின் வளமான இல்மனைட் சுரண்டப்பட்டு கப்பலில் ஏற்றி சென்ற போது தமிழர்களின் படைப்புலமும் ஆயுதமும் அதனை தடுத்து நிறுத்தியது வரலாறு .
யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கனியவளம் மட்டும் அல்ல தமிழர்கள் நிலத்தை அபிவிருத்தி எனும் போர்வையில் அந்நிய சக்திகளுக்கு கொடுக்க முனைவதும், அதனை அமைதி வழியில் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை தாக்குவதும் மீண்டும் பழைய நிலையை தோற்றுவிக்கவா? என்றும் கேட்கத் தோன்றுகின்றது.
மக்களின் பலத்துடன்
தற்போது தமிழர்கள் முகம் கொடுக்கும் சவால்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தெற்கின் முற்போக்கு அரசியல் முகம் கொண்ட அரசியல் கட்சி ஒன்று தமிழர்களின் அரசியலை ஆக்கிரமிக்க தமிழர் தாயகத்தில் களம் இறங்கி உள்ளது.
தீர்வுக்கு பக்க பலமாக இருப்பதாகவும் அதற்கான போராட்டங்களை தலைமை தாங்கி முன்னெடுப்பதாகவும் காட்டி நிற்பது தமது கட்சி அரசியலை தமிழர் தாயகத்தில் பலப்படுத்தவே.
மீண்டும் ஒரு முறை விட்டில் பூச்சிகளாகி எம்மை நாமே அழித்துக் கொள்ளக் கூடாது என அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தமிழ் அரசியல் தலைமைத்துவங்களும் ,சிவில் சமூக அமைப்புகளும், அரசியல் வழிகாட்டிகளாக தம்மை அடையாளப்படுத்தி கட்டுரை வரைபவர்களும் விழித்துக் கொள்ள வேண்டிய காலம் இது.
தமிழர்களின் தீர்க்கப்படாத அரசியல் பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் நீர்த்துப்போக செய்யவும், தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த சர்வதேச போர் குற்றங்களுக்கான நீதியை உள் நாட்டு விசாரணை பொறிமுறைக்குள் முடக்கவும் சிங்கள பௌத்தத்தின் நீதியை திணிக்கவும் ஆட்சியாளர்கள் மிகத் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதனை அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்களின் பலத்துடன் தான் முறியடிக்க முடியும். இனியும் காலம் தாமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



