இந்திய மக்களவைத் தேர்தல்: மேற்பார்வை பணிக்கு இலங்கைக்கு அழைப்பு
இந்திய மக்களவைத் தேர்தல் (General election of India) பணிகளை மேற்பார்வை செய்வதற்காக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சர்வதேச தேர்தல் பார்வையாளர் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதுவராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்களவைத் தேர்தல்
உலகின் மிகப்பெரிய தேர்தலொன்று நடைபெறுவதைக் காண்பதற்காக 23 நாடுகளிலுள்ள தேர்தல் முகாமைத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய 75 சர்வதேச பார்வையாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையகம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, மே மாதம் 4 ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறுகின்ற சர்வதேச தேர்தல் பார்வையாளர் நிகழ்ச்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 10 உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழு பங்கேற்கின்றது.
இந்த தூதுக்குழுவில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2 பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை உருவாக்குவதற்கான குழுவின் 8 பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில், இலங்கை தூதுக்குழுவின் பங்கேற்பு, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான தேர்தல் நடைமுறைகள் தொடர்பான அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்குமான முக்கிய தளமாக இது அமையும் என இலங்கைக்கான இந்திய தூதுவராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |