ஜனநாயக முறையில் கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பமே பொது வேட்பாளர் விவகாரம்
ஜனநாயக முறையில் கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பத்தை ஒவ்வொரு தமிழனும் பயன்படுத்தி எமது உரிமையை அங்கீகரிக்க சங்கு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஜெயசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
“கடந்த 75 வருடங்களாக தமிழர்கள் தங்கள் உரிமைக்காக பலவகையில் போராடி இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான எந்த தீர்வையும் இதுவரை வழங்கவில்லை.
இந்திய - இலங்கை ஒப்பந்தம்
பல ஒப்பந்தங்கள், பல வட்டமேசை மாநாடுகள் பல பேச்சுவார்த்தைகள் பல வாக்குறுதிகள் நடைபெற்றும் எதையும் நிறைவேற்றவில்லை.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆகக்குறைந்த அதிகாரமான 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் தந்தைசெல்வா தொடக்கம் சம்பந்தர் ஐயா வரை ஏமாற்றப்பட்டார்கள்.
ஆகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எமது தீர்வுக்கான புதிய அணுகுமுறையாக அணுகி ஒவ்வொரு தமிழ் மக்களும் இதனை பயன்படுத்தி சங்குச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
நாம் இந்த நாட்டின் பூர்வீக குடிகள். வடக்குஇ கிழக்கு தமிழர்களுடைய தாயகம் நாம் தனித்துவமானவர்கள் எமக்கு சுயநிர்ணய உரிமையுண்டு எமது நிலம், மொழி, கலை, கலாசாரம், பண்பாடு போன்றன பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்கு பூரண சுயாட்சி அதிகாரம் எமது பகுதிக்கு தேவை என்பதை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் கோரிக்கைக்கான சர்வஜன வாக்கெடுப்பாக இந்த தேர்தலை கருதி ஒவ்வொரு தமிழனும் தவறாது சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எமது உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
எமது கோரிக்கையை, வன்முறையற்ற ஜனநாயக வழியில் கிடைத்த அரிய சந்தர்ப்பமான இத்தேர்தலில் எமது மக்கள் ஒவ்வொருவரும் தவறாது அதிகூடியளவில் வாக்களிக்கவேண்டும்.
இதன்மூலம் இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் தமிழர்கள் தம் உரிமைக்கான கோரிக்கையில் உறுதியாக இருக்கின்றார்கள்.
என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். ஒவ்வொரு தமிழ் மகனும் இந்த ஜனாதிபதித்தேர்தலில் இணைந்து சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் நாங்கள் ஒவ்வொருவரும் இந்த உரிமைக்கான அங்கீகாரத்திற்கு பங்களித்து உள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்த வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதியில் வசிக்கும் எமது தாயகத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் பொதுவேட்பாளரான பா. அரியநேந்திரனை ஆதரித்து சங்கு சின்னத்திற்கு வாக்களித்து உங்கள் வரலாற்று கடமைகளை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்” என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |