15 ஆண்டுகளின் பின் செயல்வடிவம் பெறும் பொது வேட்பாளர் கருத்து
நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 7 அரசியற் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து வரும் செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி யாழ்நகரில் வைபவரீதியாகக் கையெழுத்திடுகின்றனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்ந்ததைத் தொடர்ந்து தமிழ் மக்களின் தேசிய அரசியலை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தி அதன்மூலம் தமிழ்த் தேசியத்தை வீரியத்துடன் முன்நிறுத்த முடியுமென்ற அறிவார்த்த கருத்தியல் முன்னெழுந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்படி அது இன்று கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் செயல்வடிவம் பெறும் நிலையை எட்டியுள்ளது.
ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியம் சின்னாபின்னப்பட்டு சிதைவடைந்து விட்டது.
இந்த நிலையில் தமிழ் மக்கள் மீண்டெழுவதற்கான வழிவகைகள் பற்றி ஒரு தெளிவான பார்வை தமிழ அரசியல் தலைமைகளிடம் இருந்திருக்கவில்லை.
2010 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழ் தேசிய ஒருமைப்பாட்டை மீள் கட்டுமானம் செய்ய முடியும் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.
ஆனால் அந்தக் கருத்துநிலை செயல் வடிவத்துக்கு வருவதற்கு 15 ஆண்டுகள் தேவைப்பட்டது என்பது தமிழ் அரசியல் தளத்தில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய திருப்பமாக அமைகின்றது.
"எம்மிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டுதான் எதனையும் ஆக்க முடியும்" இல்லாத ஒன்றைப் பற்றி ரம்யமான கற்பனையில் கோட்டை கட்டுவதை விட எம்மிடம் இருப்பதை வைத்து சூழலுக்குப் பொருத்தமாக நமது தேவையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
இது தமிழ் அரசியல் பரப்பிக்கு மிக முக்கியமான அகரவரிசை. இன்று ஈழத் தமிழர்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழர்கள் புத்திபூர்வமாக சிந்திக்க வேண்டும்.
நாம் எங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருக்கிறோமோ அங்கிருந்து கொண்டுதான் அடுத்த கட்ட பயணத்தை ஆரம்பிக்க முடியும்.
முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நாடாளுமன்ற அரசியலுக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற முடியாது என்று மிக தெளிவாக தெரிந்தாலும் இன்றுள்ள களயதார்த்தம் இலங்கை அரசியல் யாப்புக்குள் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய வழி வகைகளை தேடுவதும் அதிலிருந்து தமிழ் மக்கள் தம்மை தற்காத்துக் கொள்வதும்தான்.
நிலம், மக்கள், அரசாங்க, இறைமை என்று நான்கு முக்கிய அம்சங்களை உள்ளடக்கமாக கொண்ட ஒரு அமைப்பையே அரசு எனப்படுகிறது.
ஒடுக்கு முறை இயந்திரம்
அரசு என்பது எப்போதும் ஒடுக்கு முறை இயந்திரம்பாகவே தொழிற்படும்.அது மக்களை ஒடுக்குவதற்கான ஆயுதப் படையை கொண்ட நிறுவனம் என்பர். அது தனது கட்டளைக்கு கீழ்படியாத மக்களை தயவு தாட்சனை இன்றி அடக்கி ஒடுக்கும்.
இத்தகைய அரசு தன்னை நிர்வகிப்பதற்கு வழிகாட்டியாக உருவாக்குகின்ற ஒழுக்க விதிகளை அரசியல் யாப்பு(Constitution) என்கிறோம்.
இந்த அரசியல் யாப்பு எப்போதும் ஒரு தத்துவ உள்ளடக்கத்தை(philosophical content) கொண்டிருக்கும். இந்த அடிப்படையில் காலனித்துவ காலத்துக்கு முன்னைய காலத்தில் இரண்டு தேசிய அரசுகள் இலங்கைத்தீவில் இருந்தன.
ஆனால் காலனித்துவத்தின் பின்னான அரசியல் இலங்கைத்தீவில் ஜனநாயகம் என்ற அடிப்படையில் பெரும்பான்மை இனவாதம் மேலெழுந்து ஒரு இனவாத அரசாக இலங்கைத்தீவு அரசு உருப்பெற்றுவிட்டது.
அந்த அரசு சிங்கள பௌத்த அரசாகவே நிலை பெற்று விட்டது. இந்தச் சிங்கள பௌத்த அரசு சிங்கள இனத்துக்கே உரித்தான தத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்கும். இத்தகைய இலங்கையின் சிங்கள் அரசியல் யாப்பு தம்மதீபக் கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டே வரையப்பட்டிருக்கிறது.
ஒற்றை ஆட்சியை பெரும்பான்மை இனவாத அடிப்படையிலேயே வரையப்பட்டிருக்கிறது. எனவே அது சிங்கள மொழியையும் பௌத்தத்தையும் முதன்மைப்படுத்துவதாகவும், இத்தீவு அவர்களுக்கே உரித்தானது என்ற அடிப்படையிலான ஒழுக்க விதிகளையே பிரதானமானதாக கொண்டிருக்கும். நடைமுறையிலும் அதனையே அது பிரயோகிக்கும்.
ஆயினும் ஜனநாயகம் மனிதவுரிமை, சர்வதேச நியமங்கள் என்பவற்றிற்கு கட்டுப்பட்டது போன்று ஏனைய அளவால் சிறிய தேசிய இனங்களையும், மதங்களையும் அரவணைப்பதற்கான விதிகளும் உப விதிகளும் வார்த்தை ஜாலங்களால் ஜோடிக்கப்பட்டிருக்கும். அவை வெறும் எழுத்து வடிவில் மட்டும் பதிவிடப்பட்டிருக்கும்.
ஆனால் அவை நடைமுறையில் அரசை இயந்திரத்தினால் பின்பற்றப்படுவது கிடையாது. ஏனெனில் அரசதிகாரம் பெரும்பான்மை வாதத்திடம் இருக்கிறது என்ற அடிப்படையில் அளவால் சிறிய தேசிய இனங்கள் இங்கே அடக்கப்படுவதையே தத்துவமாக இந்த அரசு கொண்டிருக்கிறது.
ஆயுதப் போராட்டம்
அதுவே சிங்கள தேசியவாதத்தின் விருப்பாகவும் கோட்பாடாகவும் அமைந்திருக்கிறது. ஈழத்தமிழர் நடத்திய ஆயுதப் போராட்டம் என்பது சிங்கள பெரும்பான்மை இனவாதத்தை எதிர்த்து, அதன் அரசியல் யாப்பை எதிர்த்து, மறுதலித்து, தமிழ் மக்களுக்கே உரித்தான சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கும், தமிழ் மக்கள் இழந்துபோன தமது அரசை மீளப் பெறுவதற்காகத்தான்.
ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் தமிழர் தாயகத்தின் பெரும்பான்மை நிலம் நிலத்தின் இறைமை போராட்ட தரப்படும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் போராட்டத் தரப்பு இலங்கை அரசின் தேர்தல்களை புறக்கணித்தது அல்லது பகிஷ்கரித்தது.
அவ்வாறு அவர்கள் பகிஷ்கரித்ததன் மூலம் சிங்கள தேசத்தின் இறைமையும், சிங்கள தேசத்தின் அரசியல் யாப்பும் தமிழர் தேசத்தில் செல்லுபடி அற்றது என்பதை வெளிக்காட்டியது.
முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் இலங்கைத் தீவின் தமிழர் தாயக பரப்பின் இறைமை சிங்கள பௌத்த அரசிடம் மீண்டும் சென்று விட்டது. இந்த நிலையில் சிங்கள அரசின் யாப்புக்குள் நின்று கொண்டுதான் இப்போது தமிழ் மக்களுக்கான அடுத்தகட்ட போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
இந்தப் பின்னணியில்தான் இலங்கையின் அரசியலும் தமிழ் மக்களின் அரசியல் விருப்பை புறம் தள்ளுவதாகவே அமையும் ஆயினும் ஜனநாயக நடைமுறை என்ற அடிப்படையில் இலங்கையின் அரசியல் யாப்பே அரசு இயந்திரத்தை வழிநடத்துகின்ற என்பதன் அடிப்படையில் சிங்கள அரசுக்குள் அகப்பட்டு உள்ள தமிழ் தேசிய இனம் அந்தச் சிங்கள அரசின் யாப்பாகிய வழிகாட்டு வழிகாட்டி தத்துவத்தில் தமக்குச் சாதகமான, தமக்கு ஏற்றவாறு பயன்படுத்தக்கூடிய ஓட்டைகளைக் கண்டறிவதும் அவற்றைப் பயன்படுத்துவதும் அவசியமாகும்.
எனவே எதிரியின் கோட்டைக்குள் புகுந்து எதிரியை திணறடிக்கும் தந்திரோபாயத்தின் அடிப்படையில் இலங்கை அரசியல் யாப்புக்குள் நாம் எவற்றை பயன்படுத்த முடியுமோ அவற்றை பயன்படுத்த வேண்டும்.
நெல் வயலில் களை பிடுங்க வேண்டுமாக இருந்தால் வயலுக்குள் இறங்கித்தான் களைபிடுங்க வேண்டுமே ஒழிய வயல் வரம்புக்கு மேலுன்றோ வெளியே நின்று கொண்டு களைபிடுங்க முடியாது.
அவ்வாறுதான் இலங்கை அரசியல் யாப்புக்குள் ஈழத் தமிழர் இறங்கி நின்றுதான் இலங்கையின் அரசாங்கத்தை, சிங்கள அரசியல் தலைவர்களை சவாலுக்கு உட்படுத்தி நெருக்கடிக்குள்ளாக்க முடியும். எதிரியை நெருக்கடிக்குள் தள்ளுவதன் மூலமே அவனிடமிருந்து நமக்கான அரசியல் நலன்களின் ஒரு பகுதியையாவது பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த வகையில்தான் இலங்கையின் அரசியல் யாப்புக்குள் இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்கின்ற முறைமைக்குள் இருக்கின்ற அறுதிப் பெரும்பான்மை என்ற விடயத்தை இப்போது தமிழ் மக்களால் கையில் எடுக்க முடியும். இன்று சிங்கள தேசத்தின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்த ஒரு வேட்பாளரும் 50 வீதத்துக்கு மேல் அதாவது அறுதிப் பெரும்பான்மையை பெற முடியாதவர்களாக உள்ளனர்.
தமிழ் மக்களின் வாக்குகள்
எனவே இப்போது சிங்களத் தலைவர்களுக்கு தமிழ் மக்களுடைய வாக்கு மிக அவசியமாக உள்ளது. தமிழ் மக்களின் வாக்குகள் இன்றி இன்றைய நிலையில் எந்த ஒரு அரசியல் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையை பெறமுடியாது.
அதே நேரம் சிதறிக் கிடக்கின்ற தமிழ் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கவும், ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதும், ஒரு புரிந்துணர்வுக்கு வருவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் எதிர்கால ஐக்கியத்தை நிலை நாட்டுவதற்கும் தமிழ் மக்களின் வாக்குகளை ஒன்று குவிப்பதும், தமிழ் மக்கள் உருத்திரண்டு திரட்சி பெறுவதன் மூலம் தமிழ் தேசியத்தை மீள்கட்டுமானம் செய்வதற்குமான ஒரு வாய்ப்பாகவும் ஜனாதிபதித் தேர்தலை தமிழர்கள் பயன்படுத்த முடியும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த சிங்கள தலைவர்களும் தமிழ் மக்களுக்கு அல்லது தமிழ் அரசியல்வாதிகளுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் இந்த நிமிடம் வரை நிறைவேற்றியது கிடையாது.
அதேபோலவே சிங்களத் தலைவர்கள் அண்டை நாட்டுக்கும் ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது கிடையாது.
ஐ.நா மனித உரிமை மன்றத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றியது கிடையாது. இங்கே சிங்கள ராஜதந்திரம் என்பது எப்போதும் வாக்குறுதிகளை கொடுப்பதும் பின்னர் காலத்தை இழுத்தடிப்பு செய்து வாக்குறுதிகளை மறக்கடிக்கச் செய்வதுதான் அவர்களுடைய தந்திரமாகும்.
இலங்கை ஜனாதிபதி ஆட்சி முறைமை என்பது இலங்கைத் தீவின் ஒற்றை ஆட்சியை வலுப்படுத்துகின்ற ஒரு முறைமையாகவே வளர்ச்சி அடைந்திருக்கிறது.
அதிகாரக் குவிப்பு
அதே நேரத்தில் உலகின் அரசியல் தலைவர்கள் யாருக்கும் இல்லாத நிறைவேற்று அதிகாரம் என்ற அதிகாரக் குவிப்பு நிறைந்த ஒரு பதவி நிலையாகவும் இது விளங்குகிறது.
இலங்கை ஜனாதிபதி நினைத்தால் மறுகணமே இலங்கையின் நிர்வாக விடயத்தை உடனடியாக மாற்றி அமைக்க முடியும். அவ்வாறே தமிழ் மக்களுக்கு கொடுக்கின்ற வாக்குறுதியையும் அடுத்த கணமே நிறைவேற்ற முடியும்.
அந்த அளவிற்கு இலங்கை ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதைப் போன்று இலங்கை அரச நிர்வாகக் கட்டமைப்பு இலகுபடுத்தப்பட்டதாகவும் விரைவாக செயல்படுத்தக் கூடியவாறு கட்டமைப்புச் செய்யப்பட்டு இருக்கிறது.
எனவே இங்கே இலங்கைத் தலைவர்கள் கொடுக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பது அவர்கள் நினைத்தால் நிறைவேற்றிட முடியும் ஆனால் இந்த அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு சாதகமான எதையும் நிறைவேற்றுகின்ற மனநிலையில் இல்லை அது பொதுவாக சிங்கள தலைவர்கள் அனைவரிடமும் உள்ள பொது புத்தியாகவும் சமூகவியல் ஆகவும் காணப்படுகிறது.
ஆகவே இனியும் சிங்களத் தலைவர்களை நம்பி அவர்களுக்கு வாக்களித்து எதையும் பெறாமல் இருப்பதை விட நமக்கு நாமே என்ற அடிப்படையில் ஐக்கியம், ஒருமைப்பாடு, கூட்டு என்ற முப்பரிமாணத்தில் நம்மை நாமே பலப்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாகவும் சந்தர்ப்பமாகவும் காலச் சூழலாகவும் அமைவதனால் இதனை சரிவர பயன்படுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் ஒரு ஜனாதிபதி பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நிலையை 15 ஆண்டுகள் கடந்து இன்று எடுத்திருக்கிறார்கள் என்றால் அது ஒரு பெரிய நீண்ட கால தாமதம்தான்.
எனினும் இனியாவது புத்திபூர்வமாக செயல்பட வேண்டும் இந்த நிலையில்தான் தமிழ் மக்களின் குடிமக்கள் சமூகம் ஒரு தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற முடிவை எடுத்து ஒரு நீண்ட பிரார்த்தனங்களுக்கு மத்தியில் குடிமக்கள் சமூகமும் பலதரப்பட்ட தமிழ் மக்கள் கட்டமைப்புகளும் ஒன்றிணைந்து பீல் சமூக கட்டமைப்பாக பொது ஜனாதிபதி வேட்பாளர் என்பதை ஒரு கட்டத்துக்கு நகர்ந்து இருக்கிறார்கள்.
நிலையில் அரசியல் கட்சிகள் சார்ந்து முதன் முதலில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு பொது வேட்பாளர் வேண்டுமென்ற கருத்தை முதன் முதலில் முன்வைத்தார்.
அவரைத் தொடர்ந்து நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு பொது வேட்பாளர் வேண்டுமென்றும், வேண்டுமானால் தான் பொது வேட்பாளராக நிற்கத் தயார் என்றும், இல்லையேல் கட்சியின் சின்னம் வேண்டுமானால் கட்சியின் சின்னத்தை தான் தர தயார் என்றும் ஒரு நீண்ட கடிதத்தை எழுதினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியம் பேசுகின்ற எட்டு கட்சிகள் பொது வேட்பாளர் என்ற பொதுநிலைக்கு வந்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீதரனும் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவ்வாறே கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மையான தமிழர் கட்சி தலைவர்கள் பொது வேட்பாளர் ஆதரவ நிலையை எடுத்திருக்கின்றனர்.
பொது வேட்பாளர்
அதே நேரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி பொது வேட்பாளர் விடையத்தை தாங்கள் எதிர்க்க போவதில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர் எதிர்வரும் காலத்தில் அவர்கள் ஆதரிக்கலாம் என்றும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இப்போது தமிழ் பொது வேட்பாளர் என்பது ஒரு அரசியல் பரிமாணத்தை அரசியல்வாதிகள் மட்டத்தில் பெற்றுவிட்டது. இதன் அடுத்த கட்ட நகர்வாக அரசியல் கட்சிகளை இதில் இணைந்து ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை வரையும் அளவிற்கு பொது வேட்பாளர் என்ற கொள்கை நிலைப்பாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது.
இது ஒரு நல்ல முன்னேற்றகரமே. இன்றைய நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளின் பெரும்பான்மையினர் பொது வேட்பாளர் வேண்டுமென்ற ஒரு பொது நிலைக்கு வந்துவிட்டனர்.
இது தேர் வடக்கு வீதிக்கு வந்து விட்டது என்பதை என்ற செய்தியை பறை சாற்றுகிறது.
இத்தகைய ஒரு உதய திசை நோக்கிய தமிழ்த் தேசிய அரசியலை முன்நகர்த்துவதற்கு தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு அரசியல் தலைவர்கள், கல்விமான்கள், உயர்கல்வி மாணவர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், மதகுருக்கள், பொது அமைப்புக்கள், சமூக வலைத்தள செய்தியாளர்கள் என அனைத்து தமிழ் ஆர்வலர்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய காலகட்டத்திற்குள் தமிழினம் நிற்கிறது.
அவ்வாறு செயல்படுவதன் மூலமே தமிழ் மக்களின் ஐக்கியத்தை(Unity) ஒருமைப்பாட்டை(integrity) திரட்சியை (solidarity) வெளிப்படுத்த வேண்டும் என்பதையே வரலாறு வேண்டி இருக்கிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 21 July, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.