பார்வையில் படிந்த பாலின பாகுபாடு
ஆணும் பெண்ணும் சமம் பாலினத்தை காரணம் காட்டி உரிமைகள் மறுக்கப்படகூடாது என சட்டம் சொல்கிறது. ஆனால் யதார்த்ததில் பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது? இன்னும் கூட பெண் குழந்தை பிறந்தால் முகம் சுழிக்கும் உறவினர்கள் தான் அதிகம்.பெண்கள் என்றதுமே அவர்களை திருமணத்துக்கு தயார் செய்வதுதான் தங்களின் தலையாய கடமை என்று பெற்றோர் நினைக்கின்றனர். ஒரு பெண் நல்ல நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டாலும் திருமணத்துக்கு பின்பு குடும்பக் கடமைகளையும் குழந்தை வளர்ப்பு பொறுப்புக்களையும் காரணம் காட்டி வேலைக்கு செல்வதை பல குடும்பங்களில் தடுத்து விடுகின்றனர்.
இதனால் அந்த பெண்ணின் திறமைகள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்படுகின்றது. படிப்பை பாதியில் விடுவது, வேலையில் இருந்து நிற்பது என்பதெல்லாம் பெண்களில் வாழ்க்கையில் இயல்பான நிகழ்வாகிவிட்டது. பெரும் போராட்டதுக்கு பிறகு வேலையில் சேர்ந்தாலும் பணியிடங்களில் பாலின பாகுபாடு எனும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். பாலின பாகுபாடு காரணமாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல வாய்ப்புகளை இழக்கும் நிலை இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
அது மட்டும்மன்றி வெளியில் செல்லும் போதும் பணியிடங்களிலும் பெண்களால் சுகந்திரமாக இயங்க முடிவதில்லை. எப்போதும் ஒரு எச்சரிக்கை உணர்யுடனே இருக்க பெண்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். வன்முறையின் நடுவே அவர்களின் அன்றாட பயணம் இருக்கிறது. இப்படியான ஒரு சூழலில் பெண்களும் ஆண்களும் சமன் எனும் கருத்து வெறும் கருத்தாக மட்டுமே இருக்கிறது என்பது வருந்தத்தக்க உண்மை.
பாலின சமநிலை என்பது பாலினம் சாராமல் அனைவரும் வளங்களையும், வாய்ப்புக்களையும் பெரும் நிலைமையை குறிக்கிறது. இதில் பொருளியல் பங்கேற்பும் முடிவெடுக்கும் திறனும் அடங்கும்.மேலும் இது வேறுபட்ட நடத்தைகளையும், ஆர்வங்களையும்,தேவைகளையும் பாலின பாகுபாடு இன்றி மதிப்பிடும் நிலையை குறிக்கிறது. பாலின சமநிலை அல்லது பாலியல் சமநிலை என்பது சமூகத்தில் ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்.
பாலினத்தை அடிப்படையாக கொண்டு பாகுப்படுத்தலகாது என்ற கருத்து நிலை ஆகும். இதை தான் சட்டமும் கூறுகின்றது. இதுவே சர்வதேச மனித உரிமைகள் சாற்றுரையின் நோக்கமும் ஆகும். சட்டதின்படியும் ஜனநாயக செய்யற்படுகளிலும் ஆண், பெண் சமநிலையை உருவாக்குவதும் சமனான பணிகளுக்கு சமனான ஊதியம் வழங்களும் இந்த சாற்றுரையின் இலக்காகும்.
பல விடயங்களில் ஓரங்கட்டப்படும் பெண்கள்
ஆனால் யதார்த்ததில் இன்றும் கூட பெண்கள் பல விடயங்களில் ஓரங்கட்டப்படுவதும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதும் மறுக்க முடியாத உண்மை. எல்லா சவால்களையும் தாண்டி ஒரு பதவியில் தன் திறமையால் நல்ல ஊதியம் பெரும் பெண்களையும் கூட இந்த சமூகம் பாராட்டுவதில்லை. மாறாக அவர்களின் திறமையால் அல்ல அழகினாலோ, தவறான நடத்தையாலோ அந்த இடத்தை பெற்றாதாக பழி சொல்லவே செய்கின்றது.இந்த நிலை இதுவரையில் ஒரு ஆணுக்கு நேர்ந்ததாக சரித்திரம் இல்லை.
ஒரு ஆணுக்கு கிடைக்கும் பதவியும், ஊதியமும்,பதவி உயர்வும், பாராட்டுக்களும் அவனின் திறமையால் என்று ஏற்றுக்கொள்ளும் இந்த சமூகம் அதுவே ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் போது அவ்வாறு ஏற்க மறுக்கும் நிலைதான் பெரும்பாலும் காணப்படுகின்றது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் குழந்தை பருவத்தில் இருந்தே இந்த பாகுபாட்டை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பெண் பிள்ளைகளையும், ஆண் பிள்ளைகளையும் சமனான உரிமைகளுடன் வளர்க்க வேண்டியது அவசியம். வீட்டு வேலைகளை பெண்களுக்கு மட்டுமன்றி ஆண் பிள்ளைகளுக்கும் செய்வதற்கு பழக்கப்படுத்த வேண்டும். ஆண் பிள்ளைகள் முதலில் தன் தாய்க்கு சமையல் வேலைகளிலும், வீட்டு வேலைகளிலும் உதவி செய்யும் மனப்பாங்கு இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் தனக்கு மனைவியாக வரும் பெண்ணுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும்.
ஆனால் பெரும்பாலான பெற்றோர் ஆண் பிள்ளைகளுக்கு சற்று அதிகமாக உரிமை வழங்குவதும் சலுகை காட்டுவதும் பாசம் காட்டுவத்தில் பாரபட்சம் பார்ப்பதும் தொண்டுதொட்டு நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது.இன்று பெண்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளுக்கும் காரணம் ஆண்கள் மட்டும் அல்ல. அவர்களை அப்படி வளர்த்த அவர்களின் தாயான பெண்ணும் தான். தானும் ஒரு பெண் என்பதை மறந்து இன்றும் எத்தனை பெண்கள் ஆண் குழந்தையை பெறுவதை பெருமையாக நினைக்கின்றனர். இதற்க்கு என்ன காரணம் என்றால் ஆண் என்றாலே உயர்ந்தவன் என்ற பிரம்மை எல்லோர் மனதிலும் குடிகொண்டிருப்பதுதான். சினிமாவிலும், விளம்பரங்களிலும் பெண்களை பெரும்பாலும் ஒரு பாலியல் பண்டங்களாகவே பயன்படுத்தும் ஒரு அவல நிலை காணப்படுகின்றது.
இதுவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழிவகுக்கும் முக்கிய காரணியாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் உயிரியல் ரீதியான சில வேறுபாடுகள் மட்டுமே உள்ளது. தவிர ஆண் உயர்ந்தவன் என்பதும் சிறந்தவன் என்பதும் சமுதாயம் கட்டமைத்த ஒரு புனைவு மட்டுமே.இன்று பெண்கள் ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் சரிசமனாக செய்து காட்டிவிட்டனர். சமையல் என்றதுமே பெண்கள் தான் செய்வார்கள் என்று நினைக்கும் இந்த சமூகம் பெரும்பாலான உணவகங்களில் ஆண்கள் தான் சமைக்கின்றனர் என்பதை மறந்துவிடுகின்றது.
பார்வையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை
வலிமை என்றாலே ஆண்கள் மட்டும் தான் என நினைத்துக் கொண்டு பெண் வீராங்கனைகளையும் பெண் தலைவிகளையும் மறந்துவிடுகிறது. இன்று விமானிகளாக பெண்களும் இருக்கின்றனர் சமையற்காரர்களாக ஆண்களும் இருக்கின்றனர். இருப்பினும் இன்னும் ஏன் இந்த ஆண், பெண் சமத்துவமற்ற நிலைமை நிலவுகின்றது என்றால் எமது பார்வையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை என்பதே உண்மை.
எந்த வேலையையும் யாரும் செய்யலாம் எந்த தொழிலும் இழிவானது அல்ல. ஆணாகிலும் சரி பெண்ணாகிலும் சரி ஒவ்வொருவரின் தனி திறமைக்கேற்ப அவர்களின் வளர்ச்சியும் இருக்கும். இதில் யாரும் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் அல்ல இதை ஒவ்வொருவரும் புரிந்துக்கொள்ளும் நிலை வந்தால் மட்டுமே ஆண், பெண் பாகுபாடு அடியோடு ஒழியும். ஆண்கள் பெண்களை விட சற்று உடல் அளவில் வலிமையாக இருப்பது பெண்களை கொடுமை படுத்துவதற்கோ, வன்புணர்வு செய்வதற்கோ, பெண்களை அடக்கி ஆழ்வதற்கோ அல்ல மாறாக பெண்களை பாதுகாப்பதற்கு மட்டுமே என்பதை ஆண்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதேபோல் பெண்களும் பெண்ணுரிமை என்றதும் ஆண்கள் செய்யும் எல்லா தவறுகளையும் செய்வதற்கு மட்டுமே தங்களுக்கு உரிமை. கொடுத்ததாக நினைத்து மது அருந்துதல், புகைபிடித்தல் என எல்லாவற்றையும் செய்கின்றனர்.
இது ஒரு தவறான புரிந்துணர்வு மது, போதை பொருள் பாவனை மற்றும் புகைத்தல் என்பன ஆணுக்குறியது அல்ல அதே போல் பெண்ணுக்குறியதும் அல்ல இது இருவருக்கும் தீங்கானது இதை உணராத சில பெண்கள் அதை செய்வதை தங்களின் உரிமையாகவும் பெருமையாகவும் எண்ணும் அவல நிலை நிலவுகின்றது. இதை பெண்கள் உணர வேண்டும்.பெண் சுதந்திரம் என்பது ஆண்கள் செய்யும் தவறுகளை மட்டுமே வரிசைபடுத்தி செய்வதல்ல.
இந்த தவறான புரிந்துணர்வை பெண்களும் மாற்றிக்கொள்ள வேண்டும் ஒரு ஆண் ஆணுக்குரிய குணாதிசயங்களோடு உயர்ந்து நிற்கின்றான். அது போல் பெண் பெண்ணுக்குரிய குணாதிசயங்களோடு உயர்ந்து நிற்கின்றாள் .ஒருவரை ஒருவர் மதிக்கவும் பாராட்டவும் கற்றுக்கொள்ள வேண்டும் எமது பார்வையில் படிந்திருக்கும் பாலின பாகுபாடு எனும் அழுக்கை நீக்கிவிட்டோமானால் மனதில் தெளிவு பிறக்கும் சமத்துவம் மிக்க சமுதாயம் மட்டுமே வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும். இந்த ஆண், பெண் பாகுபாட்டை சமூகத்தின் மிகச்சிறிய அலகான குடும்பத்தில் இருந்தே ஒழித்துக்கட்ட ஆரம்பிதோமானால் பாலின பாகுபாடு என்ற ரீதியில் இன்னொரு கட்டுரையை எழுத யாருக்கு அவசியம் இருக்காது என்பது மெய்.