உயர்தர பரீட்சையை பிற்போடுவதால் ஏற்படும் சிக்கல்: கல்வி நிபுணர்கள் எச்சரிக்கை
உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்டப் படிப்புகளுக்கான வயது வரம்பு மீறப்பட்டு இலங்கை கல்வியில் நீண்டகால நெருக்கடி ஏற்படலாம் என கல்வி நிபுணர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.
பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து முடிவு செய்யும் போது அந்த விடயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கல்வி நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஜனவரி 2024 வரை ஒத்திவைக்கப்பட்டால், அந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவிருந்த சாதாரண தரப் பரீட்சை 2024 மே மற்றும் ஜூன் வரை ஒத்திவைக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் 2023 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் தாமதமாகும். சாதாரண தரப்பரீட்சை ஜூலை 2024 வரை தாமதமாகும், பின்னர் 2024 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கு இம்முறை போன்று கூடுதல் நேரம் வழங்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
அப்படியானால், 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை மீண்டும் டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025 வரை ஒத்திவைக்கப்படும் என்றும், இது இலங்கைக் கல்வியில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்வது மேலும் தாமதமாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பரீட்சைகள் ஒத்திவைப்பு, பாடசாலை தவணைகள் தாமதம், பாடசாலைகளில் மாணவர் அனுமதி, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் கூடுதல் காலம் பாடசாலைகளில் தங்க வேண்டிய நிலை, இதனால் வகுப்பறைகளில் இடப்பிரச்சினை, உயர்தரத்திற்கான அனுமதி தாமதம், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கான புலமைப்பரிசில் அனுமதி இழப்பு, அரச துறை ஆட்சேர்ப்பு தாமதம் போன்ற நீண்டகால விளைவுகளை சந்திக்க நேரிடும் என கல்வி நிபுணர்கள் ஜனாதிபதி ரணிலிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது மட்டுமன்றி 18 வயதிலேயே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய மாணவர்கள், பரீட்சைகள் பிற்போடப்பட்டமையினால், அந்த வயதும் மீறப்பட்டுள்ளதாக கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.