வெதுப்பகங்களுக்கு பாரிய சிக்கல் (Photos)
சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மற்றும் வெதுப்பங்கள் என்பவற்றுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில வெதுப்பகங்கள் மற்றும் உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் வெதுப்பக உற்பத்திகளை விற்பனை செய்வதில் பிரச்சினையை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சமையல் எரிவாயு கோதுமை மா என்பனவற்றுக்கு முற்று முழுதாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 15 ற்கும் மேற்பட்ட உணவகங்களும் பல வெதுப்பாகங்களும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உணவக உரிமையாளர்கள் மற்றும் வெதுப்பக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தமது உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களில் பணிபுரியும் பலகுடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் காணப்படுவதாகவும் பேக்கரி உரிமையாளர் மற்றும் உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் எரிபொருள் மற்றும் கோதுமை மா சமையல் எரிவாயு என்பனவற்றை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.