ஹரி ஆனந்தசங்கரிக்கு கனேடிய அமைச்சரவையில் கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால்(Justin trudeau) கனேடிய அமைச்சரவை மறுசீரமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை(20) இடம்பெற்றுள்ள நிலையில், அதில் மத்திய அமைச்சரவையில் 8 புதிய முகங்களை உள்ளடக்கியுள்ளதுடன், 4 அமைச்சு பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் முடிக்குரிய பூர்வீகக் குடிகள் உறவுகளுக்கான அமைச்சராக இருந்த ஹரி ஆனந்தசங்கரிக்கு வடக்கு விவகாரங்கள் அமைச்சுப் பொறுப்பும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சுப் பொறுப்பும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
ஹரி ஆனந்தசங்கரி
மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணியாகவும், சமூக ஆர்வலராகவும் நன்கு அறியப்பட்ட அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு முன்பிருந்தே பூர்வீகக் குடிகளின் நலன்கள் தொடர்பில் வினைத்திறனுடன் செயற்பட்டு வந்தவர்.
அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் முடிக்குரிய பூர்வீகக்குடிகள் உறவுகளுக்கான அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதலாய், காலனித்துவ காலத்தில் பூர்வீகக் குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான பொறுப்புக்கூறல் செயல்பாட்டில் பல முக்கிய மைல்கற்களை அவர் எட்டியுள்ள நிலையிலேயே, அவருக்கு இந்த மேலதிக பொறுப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
மிகக் குறுகிய காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியை நோக்கிய பயணத்தில் எட்டிய அடைவுகளே வடக்கு விவகாரங்களுக்கான அமைச்சு மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்குப் பொறுப்பான அமைச்சும் ஹரி ஆனந்தசங்கரிக்கு கிடைப்பதற்கு காரணமாகும்.
கடந்த கோடைப் பருவகாலத்தில், ஒன்பது டகோட்டா-லகோட்டா பூர்வீகக்குடி சமூகங்களிடம், ஒக்டோபர் மாதத்தில், மனிற்றௌலின் தீவில் பூர்வீகக்குடி மக்களிடமும் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி பகிரங்கமாக மன்னிப்புக் கோரியிருந்தார்.
தமிழர்களுக்கான குரல்
1950 மற்றும் 1960களில் இன்யூட் பூர்வீகக்குடிகளின் வேட்டைநாய்கள் கொல்லப்பட்டமைக்காக அண்மையில் இன்யூட் பூர்வீகக் குடிகளிடம் நேரடியாக மன்னிப்புக் கோரியிருந்தார்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழரான ஹரி ஆனந்தசங்கரி, கனேடிய அரசாங்கத்தினதும், கனேடிய மக்களினதும் பிரதிநிதியாக, இந்த கனேடிய தேசத்தின் ஆதிக்குடிகளிடம் மன்னிப்புக் கோருவது என்பது கனடாவின் பல்கலாசார பண்பின் வெற்றிக்கான ஒரு மாபெரும் உதாரணமாகக் கொள்ளலாம்.
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு மாத்திரமன்றி, உலகெங்கிலும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்து குரலெழுப்பி வந்த ஹரி ஆனந்தசங்கரி பூர்வீகக்குடிகளுக்கான கனேடிய அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் தலைமைத்துவ பொறுப்பை ஏற்று முன்னின்று ஒரு கனேடியராக பதிவு செய்யும் தேர்ச்சிகள், உலகத் தமிழர் பெருமைகொள்ள வேண்டியதொன்றாகும்.
மேலும், இலங்கையில் தமிழர்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலை என கனேடிய நாடாளுமன்றத்தில் மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது மாத்திரமன்றி இனப்படுகொலை புரிந்த மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியவர்களுக்கு பொருளாதார மற்றும் பயணத்தடை விதிக்க வழிவகுத்தார்.
சிங்கள பேரினவாத அடக்குமுறைகளுக்கு ஆளான இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர், உலகின் மிகப்பெரும் நாடுகளில் ஒன்றான கனடாவின் பிரதிநிதியாக பொறுப்புக்கூறலை முன்னின்று செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |