கம்பளை பகுதியில் மண்சரிவினால் காணாமல் போனவர்கள்! எழுந்துள்ள குற்றச்சாட்டு
கம்பளை பகுதியில் மண்சரிவினால் காணாமல் போயுள்ளவர்களை தேடுவதிலும், உதவிகளை வழங்குவதிலும் அரச தரப்பு முறையாக செயற்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடும் மழையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்துக்கு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (2) விஜயம் மேற்கொண்டது.
நிவாரணப் பணி
இந்த விஜயத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் நடைபெற்றுவரும் நிவாரணப் பணிகளில் இணைந்துகொண்டதுடன், அரசு அதிகாரிகளைச் சந்தித்து நிலைமைகள் குறித்துக் கேட்டறிந்தனர்.

அத்துடன், கம்பளையின் இஹலகமவில் உள்ள மாவதுரவில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியை அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அங்கு மண்சரிவில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 35 பேரில், இதுவரை சுமார் 22 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துயரத்தின் மத்தியில் குடும்பங்கள்
தேடுதல் மற்றும் உடலங்களை அகழ்ந்தெடுக்கும் பணிகளுக்கு அரசாங்கம் எந்தவித உதவியும் செய்யவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகளை முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதனால், மக்கள் தங்கள் சொந்த நிதியைத் திரட்டி, காணாமல் போனவர்களை மீட்க தனியாரின் இயந்திரங்களைக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு அரசு ஊழியர்கள் கூட இதுவரை வரவில்லை என்றும், இதனால் துயரத்தின் மத்தியில் குடும்பங்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குடியிருப்பாளர்கள் சுட்டிக்காட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri