குருந்தூர் மலைக்கு சென்றமைக்கான காரணத்தை மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய உதய கம்மன்பில (Video)
வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வந்து மக்கள் பிரச்சினையை கூறுகின்ற போதும், அதன் உண்மைத்தன்மை எமக்கு தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர் சென்றிருந்ததுடன், வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவிக்கும் போதே கம்மன்பில இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதோடு, மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுக்க வேண்டுமென்பது எமது நோக்கம்.
சரியான தீர்மானம்
நான் இங்கு பார்த்தவை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் பிக்குமாருடனும் கலந்துரையாடுவேன். இதனை தொடர்ந்து இந்த விடயம் தொடர்பான சரியான தீர்மானம் மேற்கொள்ளப்படும். உங்கள் தரப்பு கதையை கேட்டேன்.
இலங்கை தொல்பொருள் திணைக்களம், பிக்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் கதையை நான் கேட்க வேண்டும். இதனை தொடர்ந்து, எந்தவொரு தரப்பினரையும் பாதிக்காத வகையில் இந்த பிரச்சினை தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிருந்து கொழும்புக்கு வந்து மக்கள் பிரச்சினையை கூறுகிறார்கள். எனினும், அதன் உண்மைத்தன்மை எமக்கு தெரியாது. அதனை தெரிந்து கொள்வதற்காக நான் இன்று வந்தேன்.
பழமையான சொத்துக்கள்
இது 2 ஆயிரத்து 100 வருடங்கள் பழைமையான விகாரை. இந்த விகாரை எமக்கு மாத்திரமின்றி முழு உலகுக்கும் சொந்தமானது. இவ்வாறான பழமையான சொத்துக்கள் வேறு நாடுகளில் இல்லை.
வயல் நிலங்களை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களாக பெயரிட மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் ஆராய வேண்டும். எதனடிப்படையில் திணைக்களத்தினர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த வயல் நிலங்களுக்கடியில் எதாவது இருப்பதை தொல்பொருள் திணைக்களத்தினர் இணங்கண்டிருந்தால், குறித்த இடம் பாதுகாக்கப்பட வேண்டும்.
மக்களால் எந்த இடத்திலும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதனடிப்படையில், மக்களுக்கு எந்தவொரு தீங்கும் நடக்க நாம் இடமளிக்க மாட்டோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










