புதிய ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்ட ரணில்! சூடுபிடிக்கும் காலிமுகத்திடலின் களநிலவரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை (Video)
புதிய இணைப்பு
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்து காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்திற்கு மாறாக இன்று ஒரு முடிவை எடுத்துள்ளது. ராஜபக்சவினரே ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளனர். எனவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஊழல் முறைமைக்கு எதிராகவும் எமது அமைதியான போராட்டங்கள் தொடரும்.
மக்கள் எதிர்பார்ப்பது ஊழல் அற்ற மக்கள் நலனை பேணும் ஆட்சியை தான். ஆனால் இப்போதும் ராபக்சவினரின் ஆட்சியே இடம்பெறுகின்றது எனவும் இந்த ஆட்சி எதிராகவும் மக்கள் போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
புதிய ஜனாதிபதி ரணில்
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு நாடாளுமன்றில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் போராட்டம்
இந்த நிலையில் இன்று காலை முதல் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ரணில் ஜனாதிபதியாக தெரிவானமைக்கு தமது எதிர்ப்பினை தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையில் அப்பகுதியில் களநிலவரம் சூடுபிடித்து வருகிறது.
இதேவேளை காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக உள்ள பண்டாரநாயக்க உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.