ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும்! முன்னாள் முதலமைச்சர் தகவல்
ஜனாதிபதி கோட்டாபய மட்டுமன்றி பிரதமர் ரணிலும் சேர்ந்து பதவி விலக வேண்டுமென வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காகவே பொதுஜன பெரமுண கட்சி உருவாக்கப்பட்டது. அப்போது சுதந்திரக் கட்சியில் இருந்த எங்களைப் போன்றவர்கள் பெற்ற தாய், தகப்பனைப் பிரியும் மனவேதனையுடன் தான் சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி பொதுஜன பெரமுணவில் இணைந்து கொண்டோம்.
அதிருப்திக்கு உள்ளாகியுள்ள மக்கள்
ஆனால் என்றைக்கு கோட்டாபய ஜனாதிபதியாக பதவி ஏற்றாரோ அன்று தொடக்கம் மக்கள் விருப்பத்துக்கு மாறான நடவடிக்கைகளையே அவர் மேற்கொண்டு வருகின்றார். அதன் காரணமாக மக்களும் பெரும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட 69 லட்சம் வாக்குகளும் கோட்டாபயவுக்காக அளிக்கப்பட்ட வாக்குகள் என்று யாரேனும் நினைத்தால் அது முற்று முழுதான தவறான கருத்தாகும்.
ஏனெனில் அதற்கு முன்னரே 2018ம் ஆண்டு தேர்தலில் அவர் இல்லாமலே நாங்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது அமோக வெற்றியைப் பெற்றிருந்தோம்.
தற்போதைய நிலையில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவென ஜனாதிபதி கோட்டாபய தன் விருப்பத்தின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்துள்ளார்.
ஆனால் அவர் பதவிக்கு வந்த நாள் முதல் மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை விட்டு வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
கோட்டாபய பதவி விலக வேண்டும்
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கோட்டா வீட்டுக்குப் போ என்று போராட்டம் நடத்தியபோது ஆரம்பத்தில் நாங்கள் அதனை தவறு என்றுதான் நினைத்தோம்.
ஆனால் இப்போது தான் அவர்களின் போராட்டம் நியாயமானது என்று எங்களுக்கு விளங்குகின்றது. இனியும் தாமதிக்காமல் கோட்டாபய பதவி விலக வேண்டும். அவர் மட்டுமல்ல அவர் நியமித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வேண்டும்.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாங்கமொன்றை ஏற்படுத்திக் கொள்ள அவர்கள் வழிவிட வேண்டும் என்றும் ரஞ்சித் சமரகோன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.



