குருந்தூர் மலையில் வன்முறையை தூண்டிய பொலிஸார் தண்டிக்கப்பட வேண்டும்: கஜேந்திரன் ஆவேசம்
குருந்தூர் மலையில் வன்முறையை தூண்டியதற்காக பொலிஸார் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (19.07.2023) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பியகேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குமுழமுனை பிரதேசம் என்பது தமிழர்களுடைய வரலாற்றுடன் தொடர்புடைய இடம். அங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது.
இனவாத வெறியர்கள்
உடைந்த நிலையில் இருந்தாலும் தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக அங்கு வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள்.
யுத்தத்திற்கு பிற்பாடு கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன் அவ்விடத்தில் இருந்த ஆதி சிவன் ஐயனார் இனவாத வெறியர்களினால் அகற்றப்பட்டுள்ளது.
இருந்தாலும் இந்த இடத்தில் தமிழ் மக்கள் வழிபாட்டு நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்துள்ள நிலமையில் கடந்த 14 ஆம் திகதியும் அந்த இடத்தில் பொங்கல் செய்து வழிபாடுகளை மேற்கொள்வதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்த இடத்திற்கு சென்றிருந்தார்கள்.
நாங்களும் வழிபாடுகள் செய்ய சென்றிருந்தோம். அப்போது அங்கு தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளும் சிங்கள இளைஞர்களும் வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் பொலிஸார் பௌத்த பிக்குகளுக்கு ஆதரவாகவும், சிங்கள பௌத்த பேரினவாத கும்பலுக்கு சார்பாகவும் செயற்பட்டிருந்தார்களே தவிர, தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள இடையூறு செய்தமைக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சலசலப்பு நிலமை
ஒரு கட்டத்தில் நாங்கள் ஆலய பீடத்தில் ஏறி வணக்க நிகழ்வுகளை செய்ய முற்பட்ட போது பொலிஸார் தடை விதித்தார்கள். அந்த பீடத்திற்கு முன்பாக பொங்கல் செய்வதற்கு அடுப்பினை பற்ற வைத்த போது பொலிஸார் காலால் உதைத்து தீபத்தை அணைத்தனர்.
அந்த பீடத்திற்கு முன்பாக அமர்ந்து பஜனைகளை செய்ய முற்பட்ட போது பௌத்த பிக்குகள் ஆலய பீடத்தில் ஏறி ஓதும் செயற்பாடுகளை செய்தார்கள்.
அப்போது எமது மக்களும் அந்த பீடத்தில் ஏறி வணக்க நிகழ்வுகளை செய்ய முற்பட்ட போது பொலிஸார் தமிழர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்.
அப்போது சலசலப்பு நிலமை தோன்றியது. அதற்கு பிற்பாடு பௌத்த பிக்குகள் அந்த இடத்தில் இருந்து பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து பொலிசாரினால் பலாட்காரம் பயன்படுத்தப்பட்டு வழிபாடுகளுக்கு வந்த தமிழ் மக்களும் வெளியேற்றப்பட்டனர். எனவே வன்முறையை துண்டியதற்காக பொலிஸார் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு எதிராக முறைப்பாடு
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னனி மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிசாருக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னனி வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவில் முமறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.
கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன் ஆகியோர் இந்த முறைப்பாட்டினை இன்று செய்திருந்தனர்.
கடந்த 14 ஆம் திகதி நீதிமன்ற கட்டளைக்கு உட்பட்டு முல்லைத்தீவு குருந்தூர்
மலையில் பொங்கல் வழிபாட்டை மேற்கொண்ட போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு
மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,
முல்லைத்தீவு பொலிஸ் நிலையப்பெறுப்பதிகாரி ஆகியோரின தலைமையில் பௌத்த
பிக்குகள், சிங்கள இளைஞர்கள் வழிபாட்டு உரிமையை தடுத்து நிறுத்தி வன்முறையைத்
துணண்டியதாகவும், இதனால் குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை
மேற்கொண்டு மனிதவுரிமையை நசிலைநிறுத்துமாறும் தெரிவித்து இந்த முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |