புலம்பெயர் தேசங்களில் முதன்முறையாக தமிழினப்படுகொலை நினைவுத்தூபிக்கு நிதி சேகரிப்பு
கனடா பிராம்டன் நகரசபை ஏகமனதாக அங்கீகரித்து, புலம்பெயர் தேசங்களில் முதல் தடவையாக பிராம்டனில் அமையும் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நிதி சேர் மெய்நிகர் நிகழ்வொன்று நடத்தப்படவுள்ளது.
கனடா பிராம்டன் நகரசபை ஏகமனதாக அங்கீகரித்து, புலம்பெயர் தேசங்களில் முதல் தடவையாக பிராம்டனில் அமையும் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக, நினைவுச் சின்ன நிதி சேகரிப்பு 2022ம் ஆண்டு தைப்பொங்கல் விழாவை, அனைத்து தமிழ் ஊடகங்களின் பங்களிப்புடன் நினைவுத்தூபி அமைப்பதற்கான உலகளாவிய நிதி சேர் மெய்நிகர் நிகழ்வாக நடத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த நினைவுத்தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றான பிராம்டன் நகரின் நகரசபையில் பீல் பிராந்திய மற்றும் பிரம்டன் நகரசபை வட்டாரம் 3 மற்றும் 4 இன் மக்கள் பிரதிநிதி Councillor Martin Medeiros அவர்களால் பிராம்டன் தமிழ் சமூகத்தின் வேண்டு கோளுக்கிணங்கக்கொண்டுவரப்பட்ட, ‘தமிழ் மக்களுக்கான நினைவுத்தூபி' அமைக்கும் தீர்மானம் ஏகமனதாக 2021 ஜனவரி20ஆம் நாள் நடைபெற்ற பிராம்டன் நகரசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் நீதி, மனித உரிமைகள் மற்றும் நிரந்தர சமாதானத்திற்காக கனடியர்கள் பாடுபடுவதற்கான ஒரு தளத்தையும்,ஊக்கத்தையும் வழங்கவும், எதிர்கால தலைமுறையினருக்கு இலங்கையில் தமிழ் மக்களை அழித்தொழிக்க நடந்த போர் மற்றும் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கவும், உரிமைப்போரில் மாண்ட தமிழ் மக்களை நினைவுகூரும் இடமாகவும் திகழும் வகையில் பிராம்டன் நகரத்தின் மையப்பகுதியிலுள்ள பொதுப்பூங்கா ஒன்றில், பிராம்டன் நகரசபைக்குச் சொந்தமான காணியில் நினைவுத்தூபி அமைகின்றது.
இனபடுகொலை நினைவுத்தூபி நிதி சேகரிப்புகாக நடைபெற இருக்கும் பொங்கள் விழாவுக்கு முழுவதுமான ஆதரவுக்கோரி பிராம்டன் நகர பிதா பற்றிக் பிரவுன் அவர்களின் செய்தி: கடந்த வருடம் இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டது.உங்களில் பலருக்கு வேதனையுடன் நினைவிருக்கிறது. பிராம்டனில் உள்ள தமிழர்கள் எழுந்துநின்று, எங்கள் நகரசபையின் ஆதரவுடன் இங்கு பிராம்டனில் கட்டுவோம் என்றார்கள்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைப் போரின் போது உயிரிழந்த அப்பாவி பொதுமக்களை நினைவுகூரும் வகையில் உலகில் கட்டப்படும் முதல் நினைவுச்சின்னம் இதுவாகும்.
பிராம்டனில் உள்ள தமிழ் அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிக்கு உங்கள் அனைவரையும் முழுமையாக ஆதரிக்குமாறு பிராம்டன் நகர முதல்வர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.
பிராம்டன் தமிழ் ஒன்றியம் மற்றும் பிராம்டன் தமிழ் மூத்தோர் சங்கம் இணைந்து நடத்தும் தைப்பொங்கல் விழாவில் பங்கேற்க உங்களை ஊக்குவிக்கிறேன்.பெருமைமிக்க கனடியர்களாகிய நாங்கள் அநீதிக்கு எதிராக நிற்பதாக உறுதியளித்தோம்.
இலங்கை அரசாங்கம் அப்பாவிகளுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களின் நினைவுகளை இடித்து வரலாற்றை மாற்றி எழுதமுயலும் போது அதனை தடுக்க நாம் எழுந்து நிற்க வேண்டும்.
நான் முன்பே சொன்னது போல் அவர்கள் சிலைகளை இடிக்கும் போதும், நினைவாலங்களை அழிக்கும் போதும் அதற்கு நேர்மாறாக செயல்படுவோம்.
எங்கள் ஒற்றுமையைக் காட்ட
இங்கு கட்டுவோம்.
மீண்டும் ஒருமுறை, பிராம்ப்டனில் உள்ள அழகிய சிங்குவேசி பூங்காவில் இந்த
நினைவுச்சின்னத்தைக் கட்டுவதற்கான இந்த தைப் பொங்கல் நிகழ்வின் போது அவர்களின்
முன்முயற்சியில் ஈடுபடவும் ஆதரவளிக்கவும் உங்களை ஊக்குவிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.