சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி இலங்கைக்கு கிடைக்காது. அதனால் எதிர்வரும் 3 மாதங்கள் மிகவும் கடினமானதாக காணப்படும். அதன் காரணமாக நாடு மிகவும் மோசமான கட்டத்தையே எதிர்நோக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் காற்சாட்டையை உயர்த்திக்கொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றுகின்றார்.
சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை எட்டப்பட்டுவிட்டதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும் கூறுகிறார்.
கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஒப்புக்கொண்டதாக கூறியவர்கள் அன்று பிற்பகல் ஐக்கிய தேசிய கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி ஒருவருடன் சீன தூதரகத்துக்குச் சென்றிருந்தனர்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கூறியது பொய்
ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போராட்ட குழுவொன்று அங்கிருந்தது.
தற்போது போராட்டத்தில் அவர்கள் இல்லை. அவர்களுக்கு தேவையான விடயங்கள் நடந்துவிட்டன.
அவர்களில் ஒருவர் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
தற்போது அவர்கள் போராட்டத்தில் இருந்து விலகியுள்ளனர்.
அவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் சீன தூதரகத்துக்கு சென்று சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இணங்குமாறு கூறியுள்ளனர்.
கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஒப்புக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் கூறினார்.
அவ்வாறெனில், தனது அடியாட்களை சீனா தூதரகத்துக்கு அனுப்பி, இதற்கு இணங்குமாறு ஏன் கூற வேண்டும்?
மேலும், இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காது என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இந்த 3 மாதங்களும் மிகக் கடினமான நிலையே காணப்படும். இதன் காரணமாக நாடு மிகவும் மோசமான கட்டத்தையே எதிர்கொள்ளும்.”என கூறியுள்ளார்.