எரிபொருளை இறக்குமதி செய்ய திலினி பிரியமாலியிடம் நிதி பெறப்படவில்லை-காஞ்சன விஜேசேகர
பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண், நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைக்கு நிதி ரீதியாகவோ, வேறு வழியிலேயே எந்த பங்களிப்பையும் வழங்கவில்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
மத்திய வங்கி மற்றும் ஏனைய வங்கிகளிடமே பணம் பெறப்படும்

எரிபொருளை இறக்குமதி செய்ய மூன்றாவது தரப்பிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன். எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கை மத்திய வங்கி மற்றும் நாட்டின் ஏனைய வங்கிகளிடம் இருந்து மாத்திரமே பணம் பெறப்படும்.
அதேவேளை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் தடையின்றி தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படும்.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏகபோக உரிமை முடிவுக்கு கொண்டு வரப்படும்

விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்யும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏகபோக உரிமையை முடிவுக்கு கொண்டு வந்து, விமான நிறுவனங்களுக்கும் அதற்கான அனுமதியை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
அத்துடன் இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது சம்பந்தமான குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும்.
அதன் பின்னர் அனுமதியை பெற்று டிசம்பர் மாதத்திற்குள் இலங்கை மின்சார சபை மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் என்பன மறுசீரமைக்கப்படும் எனவும் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.