உலக நாடுகளே அம்பிகையின் கோரிக்கையை திரும்பி பார்! - பீற்றர் இளஞ்செழியன் முழு ஆதரவு
அம்பிகையின் உணவு தவிர்ப்புப் போராட்டம் 15ஆவது நாளை எட்டியிருக்கும் நிலையில் தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அவரது அகிம்சைப் போராட்டத்துக்கு வழங்கி வரும் ஆதரவுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், அக் கட்சியின் இளைஞர் அணி பிரமுகரும், சமூக ஆர்வளருமாகிய அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
அம்மையாரின் அகிம்சை முறையிலான போராட்டத்தினை உடனடியாக கருத்தில் கொண்டு சர்வதேச தரப்புக்கள் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரச் செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பரிந்துரைக்குமாறு ஐ.நா. பாதுகாப்புக்குழு மற்றும் ஐ.நா பொதுச் சபைக்குப் பரிந்துரைத்தல் மற்றும் போர்க்குற்றங்கள், மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளைத் திறம்பட விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்பதுடன், சுயநிர்ணய உரிமை கோரும் உரித்துடையவர்கள் என்பதன் அடிப்படையில், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்மானிக்கும் வகையில், ஐ.நா. கண்காணிக்கும் வாக்கெடுப்பை பரிந்துரைக்கவும் பிரித்தானிய அரசாங்கத்திடம் வலியுறுத்தி அம்மையாரின் உணவு தவிர்ப்புப் போராட்டம் 15ஆவது நாளாக நடைபெற்று வருகின்றது.
தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு பிரித்தானியாவும் பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயம் உள்ளது. காலணித்துவ ஆட்சியின் முன்னர் தமிழர்களின் தேசமாகவே வாழ்ந்திருக்கிறோம்.
சிங்கள அரசிற்குச் சுதந்திரத்தை வழங்கும் போது, தமிழர்களுக்குரிய அபிலாசைகளை வழங்கும் வகையில் பிரித்தானியா செயற்பட்டிருந்தால், தமிழர்கள் மேல் சிங்கள அரசு மேற்கொண்ட இனவழிப்பை சந்தித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. தமிழ் மக்களாகிய நாம் இன்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்குள் வாழ்ந்து வருகின்றோம்.
அம்பிகை அம்மையாரின் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்குப் பிரித்தானிய அரசு தனது கதவுகளைத் திறக்க முன்வர வேண்டும். அத்துடன், ஏனைய சர்வதேச சக்திகளையும், தமிழர் தரப்பின் நீதிக்காகச் செயற்பட அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பௌத்த சிங்கள பேரினவாதிகள் 2009 இறுதிப் போரில் கொன்று குவித்தது தமிழ் மக்களை மட்டுமே. அது இனப் படுகொலையேயாகும்.
சிங்கள அரசு தமிழ் பேசும் மக்களாகிய தமிழர்கள் மீது இறுதிப் போரில் (முல்லைத்தீவு மாவட்டத்தில்) மேற்கொண்ட கோரத்தாண்டவம் முள்ளிவாய்க்கால் மண்ணில் அரங்கேறியது. அது இனப்படுகொலை என்பதை யாரும் மறுக்க முடியாது.
அந்த சம்பவங்கள் இன்றும் எம் மனக்கண்முன்னே நிஜமாகக் காட்சி தருகிறது. இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள்.
இலங்கையில் 30 ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் அதே சிங்கள பெளத்த நாட்டு அரசுக்கெதிராக நீடித்து வந்த உள்நாட்டுப் போர், உலக நாடுகளின் உதவியுடன் 12 ஆண்டுகளுக்கு முன்பாக 2009ஆம் மே ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகளுடன் நிறைவடைந்தது.
இலங்கை இறுதிப் போரின் போது பௌத்த சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்கள்மேல் மேற்கொண்ட இன அழிப்புக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப் புலிகளிகள் மேற்கொண்ட ஆயுத போராட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் உலக நாடுகளின் உதவியுடன் தமிழர்களைச் சிதறி பலியாக்கினார்கள்.
கைக்குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர், வயோதிபர் என வகை தொகை இன்றி இலங்கை இராணுவத்தின் கோரத்தாண்டவத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இந்த முள்ளி வாய்க்கால் மண்ணில் ஆகுதியான அந்த நெஞ்சம் மறக்காத நீங்காத நினைவை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.
தமிழர் மேல் பௌத்த சிங்கள பேரினவாதிகள் மேற்கொண்டது இனப்படுகொலை என்பதை உலகுக்குப் பறை சாற்றுவதும், எமது கடமை மட்டுமல்லாது இனப்படுகொலைக்கு நீதியான தீர்வு வேண்டும் என்பதையும் உலக நாடுகளுக்கு உரக்கச் சொல்வோம்.
எமது மண்ணின் விடிவுக்காக, எமது மண்ணில் உயிர் நீத்த எமது உறவுகள் எந்த நோக்கத்திற்காக உயிர் நீத்தார்களோ அந்த உயரிய நோக்கம் நிறைவேற, தமிழ் தேசியபற்றுறுதியுடன் எம்மை நாமே பலப்படுத்தி ஒற்றுமையாக செயல்பட்டு எமது இலட்சியத்தை வென்றெடுக்க அம்பிகை அம்மையாரின் உறுதியோடு நாமும் ஒன்று சேர்ந்து உறுதி எடுப்போம். தொடர்ந்தும் உழைப்போம் என தெரிவித்துள்ளார்.

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
