முல்லைத்தீவில் அத்தியாவசிய தேவைகளுக்கு எரிபொருள் விநியோகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 400 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 லீட்டர் டீசல் வீதம் அறுவடைக்கான டீசல் வழங்கப்பட்டு வருவதாக ஒட்டுசுட்டான் கமநல சேவைத்திணைக்கள அதிகாரி சுகந்தன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக டீசல் வழங்கும் நடவடிக்கை இரண்டு எரிபொருள் நிலையங்களில் முன்னெடுக்கப்படுவதாகவும் இந்நடவடிக்கை தேவைகளுகேற்ப குறித்த அளவை முறையில் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இவை முள்ளியவளை பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திலும் முல்லைத்தீவு நகரிலுள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிலையத்திலும் வழங்கப்படுகின்றன.
விவசாயம் நடவடிக்கை விநியோகம்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தின் கீழ் விவசாயத்தில் ஈடுப்படும் விவசாயிகளின் அறுவடைக்கான டீசல் வழங்கும் நடவடிக்கை இன்று (17) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நெற்செய்கை விவசாயிகளுக்கும் முள்ளியவளை எரிபொருள் நிலையத்தில் ஏக்கருக்கு பத்து லீட்டர் டீசல் என விநியோகிக்கப்பட்டுள்ளது.
மேலும் முத்தையன்கட்டுக்குளம், மன்னாகண்டல்,சிவநகர்,கனகரத்தினபுரம்,கற்சிலைமடு,புளியங்குளம், போன்ற வயல் வெளிகளில் மேற்கொள்ளப்பட்ட 4 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையினை மேற்கொண்ட 400 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 லீட்டர் டீசல் வீதம் அறுவடைக்கான டீசல் வழங்கப்பட்டுள்ளன.
இதனைதொடர்ந்து தற்போது அறுவடையினை மேற்கொள்ளவுள்ள விவசாயிகளுக்கு அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கமைய எரிப்பொருள் வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு விநியோகம்
அரச மற்றும் தனியார் பேருந்து மற்றும்
மீன் ஏற்றுமதி உள்ளிட்ட அத்தியவசிய தேவைகளில் ஈடுபடும் ஊர்திகளுக்கு
முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்தில் டீசல்
வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.



