எரிபொருள் விநியோக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்! முன்னணி நிறுவனம் எச்சரிக்கை
இலங்கை அதிகாரிகள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், எரிபொருள் விநியோக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என முன்னணி எரிசக்தி வர்த்தக நிறுவனமான பிபி எனர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளது.
280,000 பீப்பாய்கள் எரிவாயு எண்ணெய்க்கான தற்காலிக விலைப்பட்டியலின்படி உரிய தொகையை செலுத்தாததால் எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை ரத்து செய்ய தமக்கு உரிமை உள்ளதாக, அந்த நிறுவனம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளது.
தமது ஏற்றுமதி வந்ததைத் தொடர்ந்து 14 நாட்களுக்குள், பணம் செலுத்தப்பட வேண்டும் என அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

எரிபொருள் நெருக்கடி
கொழும்புத் துறைமுகத்தில் ஏற்கனவே நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல்களின் கொடுப்பனவுகளை அரசாங்கம் தாமதப்படுத்தியதை அடுத்து, இலங்கை மற்றொரு கடுமையான எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
அத்துடன் எரிபொருள் கப்பல்களுக்காக செலுத்துவதற்கு, 587 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதற்கு அரசாங்கம் போராடி வருகிறது.

எச்சரிக்கை விடுத்த பிபி எனர்ஜி நிறுவனம்
இதேவேளை பிபி எனர்ஜி, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பிய செய்தியின்படி, தற்காலிக விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட தொகையை விட 2 சதவீதம் அதிகமாக, தமக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் நிறுவனம் ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு கப்பலை வேறு துறைமுகத்திற்கு திருப்பிவிடும் என்றும் கூறியுள்ளது.
தற்காலிக விலைப்பட்டியல் தொகையில் 10 சதவீதத்தைப் பெற்ற பிறகு நிறுவனம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

தற்போதைய விநியோகஸ்தர்களில் சிலருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட எரிபொருள் சரக்குகளுக்கு இன்னும் பணம் செலுத்தவில்லை.
இந்த நிலையில் அவர்கள் எரிபொருள்
விநியோக செயல்முறையிலிருந்து வெளியேறினால் நாடு மற்றொரு கடுமையான எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருப்பதோடு மக்கள் சுமைகளை சுமக்க
வேண்டியிருக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.