நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்பு (Photos)
நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல குற்றச் செயல்களும் அதிகரித்து வருகின்றன.
எரிபொருட்களை பதுக்கி வைத்திருத்தல், கறுப்பு சந்தையில் எரிபொருட்களை விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான நடவடிக்கையினால் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், மக்களின் வாழ்வாதாரம் nதாடர்ந்தம் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மந்திகை
மந்திகை புலோலி பகுதியில் சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரது வீட்டிலிருந்து பருத்தித்துறை புலனாய்வு பொலிஸாரால் 10 லீட்டர் பெட்ரோல் மற்றும் 20 லீட்டர் டீசல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையின் போதே இவ் எரிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சட்டவிரோதமான எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் பருத்தித்துறை சாலை சாரதி என்பது குறிப்பிடதக்கது.
இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை பருத்தித்துறை தும்பளை பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் ஒருவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட 450 லீட்டர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் அத்தியாவசியமான தேவைகளுக்கு வழங்கவென நேற்றைய தினம் புலோலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செய்தி-எரிமலை
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான எரிபொருள் இறக்கி சேமித்து வைப்பதற்காக சாலைக்கு சொந்தமாக கொள்கலன் இருந்தும் அது சரியாக பொருத்தப்படாத நிலை கடந்த ஒரு ஆண்டாக தொடர்ந்து வருவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட அரச பேருந்து சாலைக்கு சொந்தமான பேருந்துக்களுக்கு முல்லைதீவு நகர் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே டீசலினை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனால் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள். சொந்தமாக எரிபொருள் டாங் மற்றும் எரிபொருள் விநியோகிக்கும் பம் என்பன கொண்டுவரப்பட்ட போதும் அவை இதுவரை சாலையில் பொருத்தப்படவில்லை என சாரதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு அரசபேருந்து சாலையின் நிலமைகள் தொடர்பில் வடமாகாண பிராந்திய முகாமையாளர் எஸ்.குணபாலசெல்வத்திடம் இது தொடர்பில் வினவிய போது,
முல்லைத்தீவு சாலைக்கு நீண்டகாலமக எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலை காணப்படுகின்றது முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திலும் ஏனைய சாலைகளிலும் இருந்து எரிபொருட்களை வழங்கிவருகின்றோம்.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரிடம் இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வெகு விரைவில் முல்லைத்தீவு சாலைக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தினை நிறுவி தருவதற்கு ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
மாகாணத்தில் அரச பேருந்துக்களுக்கு எரிபொருள் பிரச்சினை இல்லை ஆனால் முல்லைத்தீவு சாலையில் எரிபொருள் தாங்கி இல்லாத நிலை அவர்களுக்கு பிரச்சினைதான் அது விரைவில் தீர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
செய்தி - கீதன்
கிளிநொச்சி
கிளிநொச்சியில் சட்டத்துக்கு புறம்பான விதத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் எரிபொருள் எதுவும் மாவட்டத்தின் விவசாய தேவை மற்றும் அறுவடை என்பவற்றுக்கு வழங்கப்படாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கையில் குறிப்பிட்ட சில இடங்களில் அறுவடை செய்யக்கூடிய நிலையில் காணப்படுகின்ற போதும் அவற்றை அறுவடை செய்வதற்கு எரிபொருள் இல்லாத நிலை காணப்படுகின்றது.
இதே நேரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நெல் அறுவடைக்கு தேவையான எரிபொருளை விரைவாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாவட்டத்தில் அறுவடைக்கு தேவையான எரிபொருளை பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்ட போதும் இவ்வாறு விடுவிக்கப்பட்ட டீசலில் 1500 லிட்டர் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதைவிட ஏனைய டீசல் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றதே தவிர விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதையும் அறுவடை செய்கின்ற விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக எரிபொருளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி- யது
வவுனியா
வவுனியாவில் அத்தியாவசிய தேவைகளின் பெயரில் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றிற்கு கலனில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதால் 5 நாட்களாக வீதியில் எரிபொருளுக்காக காத்திருந்த பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டியிருந்ததாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 5 நாட்களுக்கு பின்னர் நேற்று காலை பெட்ரோல் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.
இதன்போது பெட்ரோல் எரிபொருளை பெறுவதற்காக மோட்டர் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள் என்பன நீண்ட வரிசையில் காத்து இருந்தன. எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அத்தியாவசிய தேவைக்கு என்னும் பெயரில் அரசாங்க அதிபரின் சிபார்சு கடிதத்துடன் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்று கலன்களில் எரிபொருளை பெற்றுச் சென்றிருந்தது.
இதேபோன்று, வேறு பலருக்கும் கொள்கலன்களில் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றிருந்தது. கலன்களில் எரிபொருள் விநியோகம் இடையிடையே இடம்பெற்றதுடன், தனியார் நிதி நிறுவனங்களின் கார்கள் உட்பட பல கார்கள் முறையான வரிசையின்றி செல்வாக்கு அடிப்படையில் எரிபொருளை பெற்றிருந்தன.
இதன்காரணமாக, கடந்த 5 நாட்களாக பெற்றோல் பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த முச்சக்கர வண்டியை வாழ்வாதாரமாக கொண்ட முச்சக்சக்கர வண்டிகள் உட்பட பலரும் எரிபொருளை பெற முடியாது வீடு திரும்பியிருந்ததுடன், மீண்டும் 6 வது நாளாக பெட்ரோலுக்காக காத்து இருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினரின் அனுமதியுடன் சிலிங்கோ காப்புறுதி நிறுவனத்தினர் பெட்ரோல் எரிபொருள் கோரிக்கையை முன்வைத்தனர்.
இதன்போது அவசர விபத்து சேவை காப்புறுதிப் பிரிவின் மாவட்டத்திற்கான ஒரு வாகனத்திற்கு பெட்ரோல் வழங்க அனுமதி வழங்கியிருந்தேன். வேறு எந்த வாகனத்திற்கோ அல்லது கலன்களில் பெட்ரோல் நிரப்புவதற்கோ குறித்த தனியார் நிதி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கவில்லை. அத்துடன், கலன்களில் பெட்ரோல் எடுப்பதற்கு நாம் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
செய்தி- தீபன்
மட்டக்களப்பு
இலங்கையின் இரண்டாவது பெரிய விவசாய மாவட்டமாக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு அறுவடைக்கான எரிபொருட்களை வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் முயற்சியினால் இன்று விவசாயிகளுக்கு எரிபொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. மட்டக்களப்பு மண்முனைப்பற்று கோவில்குளம் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக இந்த எரிபொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சிதமூர்த்தியின் தலைமையில் விவசாயிகளுக்கான எரிபொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன. வெல்லாவெளி,பட்டிப்பளை,வவுணதீவு ஆகிய விவசாய கண்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இன்றைய தினம் எரிபொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியில் விவசாயிகளின் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மட்;டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருட்கள் விநியோகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
செய்தி-குமார்