எரிபொருள் விலை தொடர்பில் ஆய்வு செய்யும் குழு : தேவையான டொலர்கள் கையிருப்பில்
இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு வேண்டிய டொலர்கள் கையிருப்பில் உள்ளன என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ.சானக(D. V. Chanaka) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பெருமளவு டொலர்கள் சேமிப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உலக சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் குறித்து ஆய்வு செய்ய தற்போது இரண்டு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
அக்குழுக்கள் செய்த ஆய்வுகளால் மில்லியன் டொலர்களை எமக்கு சேமிக்க முடிந்தது. மேலும், கடந்த காலங்களில், எரிபொருள் இறக்குமதியில் கப்பல்களுக்கு தாமதக் கட்டணம் செலுத்தப்பட்டது.
காலதாமதமாக கட்டணம் செலுத்துவது தொடர்பான பல்வேறு செய்திகள் தினசரி ஊடகங்களில் வெளியாகின. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கப்பல்களுக்கு தாமதக் கட்டணம் செலுத்தப்படவில்லை.
நாங்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்தியதே இதற்குக் காரணம். தற்போது எரிபொருள் கையிருப்புக்களை ஒரு மாதத்திற்கு பேணி வருகிறோம்.
ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருள் வாங்குவதற்கு டொலர்கள் கையிருப்பில் பேணப்படுகிறது. அதன்படி, எங்களிடம் இரண்டு மாதங்களுக்கு போதுமான எரிபொருள் மற்றும் டொலர்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |