எரிபொருள் விநியோகத்தில் அரச உத்தியோகத்தர்கள் குறித்து கவனம்! மாற்றுத்திறனாளிகள் விடுத்துள்ள கோரிக்கை (Photos)
நாடளாவிய ரீதியில் கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வடமராட்சியில் உள்ள ஏழு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய ஊறணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று காலை ஓய்வு பெற்றவர்களுக்கான பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
மேலும் வடமராட்சி - குஞ்சம் கடை எரிபொருள் நிரப்பு நிலையம், நெல்லியடி எரிபொருள் நிரப்பும் நிலையம், மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம், துறைமுகம் கொட்டடி எரிபொருள் நிரப்பு நிலையம், வல்வெட்டித்துறை எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் ஆகியவற்றில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களுக்கு பெட்ரோல் விநியோகம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை நேற்றைய நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகமும், புலோலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகமும், டீசல் விநியோகமும் இடம்பெற்றதுடன் பருத்தித்துறை கொட்டடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் விநியோகமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக படங்கள்: தீபன், கஜிந்தன்
வடக்கு மாகாணாம்
வட மாகாண எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றுத்திறனாளிகளை இனங்கண்டு அவர்கள் இலகுவாக எரிபொருளினை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஏற்பாடு செய்யவேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த கால போரின் பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிகளவானவர்கள் மாற்றுத்திறனாளிகளாக காணப்படுகின்றார்கள்.
போரின் பாதிப்பினால் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்பட்ட அவர்கள் தமது சுய முயற்சிகளினால் சுயதொழில்களை மேற்கொண்டு குடும்ப பொருளாதாரத்தினை கொண்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு முகம் கொடுத்து நீண்ட நேரம் காத்திருந்து எரிபொருளினை பெற்றுக்கொள்ளும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு தாம் முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவான மக்கள் போரினால் பாதிக்கப்பட்டு மாற்றுத் திறனாளிகளாக காணப்படுகின்றனர்.
அரச உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமையளிக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஏன் இந்த மாற்றுத்திறனாளிகளை கண்டுகொள்ளவில்லை என்ற ஏக்கத்தவிப்பு தற்போதும் காணப்படுவதாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே இவ்வாறான நிலையில் எதிர்வரும் காலத்தில் மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு, எரிபொருளுக்காக நீண்ட நேரம் வரிசையில் நிக்காது எரிபொருள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளளனர்.
சித்தன்கேணி
சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாளை 1500 அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் பெட்ரோல் விநியோகிக்கப்படவுள்ளது.
இதேவேளை ஆண்கள் 750 பேருக்கும் பெண்கள் 750 பேருக்கும் இன்று பெட்ரோல் விநியோகிக்கப்படவுள்ளது.
இதன்போது திணைக்கள அடையாள அட்டை, கியூ.ஆர் அட்டை குறியீடு என்பன எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்கள் 200 பேருக்கும், ஆசிரியர்கள் 100 பேருக்கும், பொதுமக்கள் 800 பேருக்கும் நேற்று தனித்தனி வரிசையில் பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் இயங்குகின்ற நிலையில் ஆசிரியர்கள் எரிபொருளுக்கு எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கியூ.ஆர் அட்டை நடைமுறை பின்பன்றலின்போது குறித்த இலக்கினை அடைந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த நிலையமும் உள்வாங்கப்பட்டதனால் மேலதிக எரிபொருள் இந்த நிரப்பு நிலையத்திற்கு கிடைத்துள்ளது.
இதேவேளை கர்ப்பிணி தாய்மாருக்கு எரிபொருள் விநியோகிப்பது தொடர்பிலும் மேற்படி சங்கம் கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: கஜிந்தன்