இரகசிய தகவலின் அடிப்படையில் திடீரென சுற்றிவளைப்பை முன்னெடுத்த பொலிஸார்
கிளிநொச்சி நகருக்கு அண்மித்த நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி நகருக்குள் சட்டத்துக்கு முரணான வகையில் எரிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் பொலிஸார் இன்றைய தினம் திடீரென விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது நவபுரம் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டீசல், மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளடங்கலாக 31 எரிபொருள் கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரடிபோக்கு பகுதி
கிளிநொச்சி கரடிபோக்கு பகுதியில் 34 கொள்கலன்களில் எரிபொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியில் உள்ள வீடு சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது, 33 கொள்கலன்களில் டீசலும், 1 கொள்கலனில் பெட்ரோலும், மற்றுமொரு கொள்கலனில் சுமார் 25 லீட்டர் மண்ணெண்ணெய்யும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின் சந்தேகநபர் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும், இதன்போது சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலதிக செய்தி - எரிமலை




