இலங்கை வரும் விமானங்களுக்கான முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் இலங்கையிலிருந்து வந்து செல்லும் விமானங்களுக்கு தடையின்றி விமான எரிபொருளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானங்களின் வருகை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிக எரிபொருள் இருப்புக்களை கொண்டு வருவது அவசியமானது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
விமான எரிபொருள்
அண்மையில் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட திருத்தப்பட்ட பெற்றோலிய சட்டத்திற்கமைய, விமான எரிபொருள் மற்றும் பெற்றோலிய வர்த்தகம் தனியாருக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் அதற்கான அனுமதி மற்றும் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேற்று அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையம்
அங்கு கருத்து தெரிவித்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள், தற்போது 5600 மெற்றிக் டன் விமான எரிபொருள் கட்டுநாயக்க விமான நிலைய களஞ்சிய வளாகத்திலும், 5575 மெற்றிக் டன் கொலன்னாவ முனையத்திலும் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, எதிர்வரும் 17 நாட்களுக்கு இலங்கைக்கு விமான எரிபொருள் கிடைக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக 30000 மெற்றிக் டன் விமான எரிபொருளை ஏற்றிச் செல்லும் கப்பல் துறைமுகத்தை வந்தடைந்ததாகவும் அதே எரிபொருள் இருப்பு இறக்கப்பட்டுள்ளதால் இன்னும் 65 நாட்களுக்கு போதுமான விமான எரிபொருளை வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
