இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசைகள்! மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு இருப்பும் இல்லை என இலங்கை பெட்ரோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மீண்டும் வரிசைகள்
இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன.
அத்துடன், முத்துராஜவெல பெற்றோலிய முனையத்திலிருந்து பெற்றோல், டீசல் விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
என்ற போதும் அடுத்த இரண்டு நாட்களில் மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வரும் எரிபொருள் கப்பல்கள்
40,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் கப்பல் ஒன்றே இவ்வாறு நாட்டை வந்தடைய உள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 92 ரக ஒக்டேன் பெற்றோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் 27 மற்றும் 29ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளது.
குறித்த கப்பலில் 33,000 மெற்றிக் தொன் பெட்ரோல் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டை வந்தடைந்த 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கப்பலில் இருந்து தரையிறக்கும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வணிகங்களுக்கான எரிபொருள்
இதேவேளை எந்தவொரு அனுமதி பெறாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத வணிகங்களுக்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் வழங்காது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதில் மேலும், 2100 இற்கும் அதிகமான நிறுவனங்களிடம் அங்கீகாரமற்ற வகையில் எண்ணெய் தாங்கிகள் காணப்படுகின்றமையை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு கண்டறிந்துள்ளது.
இதேவேளை, தற்போது 1250க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளன.
ஏற்றுமதி வணிகங்கள், தமது எரிபொருள் தேவைக்கான கட்டணத்தை அமெரிக்க டொலரில் செலுத்த வேண்டும். குறித்த வணிகங்கள், நிரப்பு நிலையங்களுக்கான விநியோகத்தரர்களிடமிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், வணிகங்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1) MOPE has observed that 2100+ Businesses has Setup their own Fuel Storage Tanks as consumer points & many without approval. CPC will not distribute to businesses that has no approvals & doesn’t comply with guidelines. Priority will be given to distribute to 1250+ Fuel Stations.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 25, 2022