நீண்ட காலத்திற்கு பின்னர் கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் எரிபொருள்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விமான எரிபொருட்களை கொண்டு செல்லும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் ரயில் மூலம் விமான எரிபொருட்களை கொண்டு செல்லப்படுகின்றன.
விமான நிலையத்திற்கு எரிபொருள்
விமான எரிபொருள் கையிருப்பு இல்லாமையால், கடந்த காலங்களில் விமான நிலையத்திற்கு எரிபொருளைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் கச்சாய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக விமான எரிபொருளின் இருப்பு தற்போது கூட்டுத்தாபனத்தின் வசம் உள்ளது.
சர்வதேச விமானங்களுக்கு எரிபொருள்
இதனால் எரிபொருள் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கொலன்னாவ பெற்றோலிய முனையத்திலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நாளொன்றுக்கு நான்கு தடவைகள் 350,000 லீற்றர் விமான எரிபொருள், புகையிரதத்தில் கொண்டு செல்லப்படுவதாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.