2022ஆம் ஆண்டில் அதிகரித்திருந்த எரிபொருள் தேவை : காஞ்சன விஜேசேகர விளக்கம்
2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022இல் எரிபொருளுக்கான தேவை அதிகரித்திருந்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எரிபொருள் பாவனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் முகமாக தனது எக்ஸ் தளத்தில் அவர் இன்று (11.04.2024) இதனை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, "2020 மற்றும் 2021இன் கோவிட் தொற்று காரணமாக முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு காலப்பகுதியில் எரிபொருள் விநியோகம் மற்றும் அதன் தேவை மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது.
நாட்டின் பொருளாதார நிலை
இதற்கு பிரதானமாக மூன்று காரணங்கள் இருக்கின்றன, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதனால் இலங்கை மின்சார சபையின் (CEB) மின் உற்பத்தி நிலையங்களுக்கு கனரக எரிபொருள் எண்ணெய் (Heavy Fuel Oil) மற்றும் நாப்தா (Naptha) கிடைக்காததன் காரணமாக டீசலின் தேவை அதிகரித்தது.
மேலும், மின்வெட்டு காலங்களில் மின்பிறப்பாக்கிகளின் பயன்பாட்டிற்காக எரிபொருளின் தேவை அதிகமாக இருந்தது. மேலும், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டுக்களின் போது எரிபொருளுக்கான தேவை அதிகரித்திருந்தது.
கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் எரிபொருள் விநியோகம் மற்றும் அதன் தேவை இயல்பாக்கப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில், இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எரிபொருள் பாவனை குறைக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், நாட்டின் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் எரிபொருள் நுகர்வு குறைவதற்கு ஒரு காரணம்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |