இன்று முதல் எரிபொருள் விநியோகம் - வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
இன்று (21ஆம் திகதி) முதல் கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னோடித் திட்டமாக தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி நாளை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கும் கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் வெளியீடு இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பின் எரிபொருள் விநியோகம்
அதன்படி, நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று முதல் நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருள் விநியோகத்தை மீண்டும் தொடங்க சிபெட்கோ முடிவு செய்துள்ளது.
0, 1, 2 என்ற பதிவு எண்ணின் கடைசி இலக்கம் கொண்ட வாகனங்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும், 3, 4, 5 ஆகிய கடைசி இலக்கங்களைக் கொண்ட வாகனங்கள் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் எரிபொருளைப் பெறலாம்.
மேலும், 6, 7, 8 மற்றும் 9 ஆகிய பதிவு எண்களின் கடைசி இலக்கத்தைக் கொண்ட வாகனங்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எரிபொருளைப் பெறலாம்.
மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகபட்சமாக 1500 ரூபாவிற்கும், முச்சக்கர வண்டிகளுக்கு 2000 ரூபாவிற்கும் ஏனைய வாகனங்களுக்கு 7000 ரூபாவுக்கு உட்பட்டு எரிபொருள் வழங்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறைக்கு இணங்காதவர்களுக்கு எரிபொருளை வழங்க வேண்டாம் எனவும், இணக்கமற்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விடுவிப்பதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.