முடங்கும் நிலையில் இலங்கை - ஜனாதிபதி பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு
எரிபொருள் விநியோகத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை திட்டத்துடன் செலுத்துவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் இணங்கியுள்ளார்.
அதுவரை தற்போதுள்ள நிதியைப் பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு நீண்டகாலமாக எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகித்து வரும் பிரதான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (27) கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகத்தை மீள வழங்குவதற்கு மத்திய வங்கி மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
தாய் நிறுவனங்களுடன் கலந்துரையாட தீர்மானம்
இதுவரை பின்பற்றப்பட்ட கடன் கடிதம் திறப்பு நடைமுறையின்படி எரிபொருள் கிடைக்காத பட்சத்தில் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தாய் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
எரிபொருள் விநியோகத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் அடுத்த சில மாதங்களுக்கு முறையான திட்டமொன்றை வகுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
எரிபொருள் விநியோக முகவர்கள், எரிபொருளை வழங்கும் தாய் நிறுவனங்கள், சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளரின் நேரடி ஈடுபாட்டின் அவசியத்தை சுட்டிக்காட்டினர்.