காய்த்துக் குலுங்கும் விழாட் மாமரங்கள் : முயற்சிக்கப்படாத பயிர்ச்செய்கை
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் வீடுகளில் நட்டு வளர்க்கப்பட்டுள்ள விழாட் மாமரங்கள் அதிகளவில் காய்த்துள்ளன.
விழாட் மாங்காய்களை உற்பத்தி செய்து பயனடைய பொருத்தமான மண் வளம் இருந்தும் மாம்பழச் செய்கைக்கான முன்னெடுப்புக்கள் உருப்படியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதிவாழ் மக்களில் பலரும் குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
விழாட் மாம்பழங்கள் சுவை மிக்கவை மட்டுமல்ல பழச்சாறு மற்றும் பழக்கலவை தயாரிக்க பொருத்தமான பழமாக இருக்கின்றது.
காலை உணவான புட்டுடன் சேர்த்து உண்பதற்கு உகந்த பழங்களில் இதுவும் ஒன்று என்று தங்கள் பழைய நினைவுகளை வயோதிபர்கள் மீட்டிக் கொண்டனர்.
பொருத்தமான முயற்சி
பழப்பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டாக முயற்சிகளை அரசு சார் அதிகாரிகள் மேற்கொள்ளும் போது பிராந்தியத்தில் பொருத்தமான தேவையான ஊட்டச்சத்து உணவுகளின் உற்பத்திகளில் தன்னிறைவு நோக்கிய திசையில் பயணப்பட வைக்கும்.
வாழை, பப்பாசி மற்றும் மாதுளை, கொடித்தோடை போன்றவற்றின் உற்பத்திகளோடு விழாட் மாம்பழங்களின் உற்பத்தியை ஒப்பிட்டால் விழாட் மாம்பழங்களின் உற்பத்தி என்பது இலகுவானதும் நீண்ட கால நோக்குடையதாக அமையும்.
விவசாயிகள் மட்டுமல்லாது பிரதேச வாழ் மக்களையும் ஒருங்கிணைத்து ஊக்குவிக்கும் போது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விழாட் மாமரங்களை நாட்டி வளர்க்கும் போது குறைந்த விலையில் மாம்பழங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது